பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇25



தாமோதரன்

யானை புகுந்த வீடாக அது இருந்தது. பானைகள் உருட்டிப் பாலும் தயிரும் ஓடவைத்தான். அவனைக் கட்டிப் பிடிக்கக் கைகள் போதவில்லை. தட்டிக் கேட்கச் சொற்கள் போதவில்லை. எட்டிப்பிடிக்க ஆளே கிடைக்க வில்லை. எங்கே அவன் என்று தேடிச் சென்றாள். உருட்டி வைத்த உரலை நிமிர்த்துப் போட்டுச் சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு,

"பாரு பாரு பட்டணம் பாரு தேவநகரம் பாரு; பாவ நாசம் பாரு; கம்ச நாசம் பாரு”

என்றான். செக்குமாடு போல வந்த இடத்துக்கே வருவது அவனுக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சம் தள்ளிப் போகப் பார்த்தான். செல்லும் இடம் எல்லாம் தம் கருமவினையே ஒருவனைத் தொடர்வதைப் போல் அவ் உரலும் உருண்டு கொண்டே வந்தது. திரண்ட இரண்டு மருத மரங்கள் அவன் செல்வதைத் தடுத்தன. வரவை மட்டும் ஏற்றுக் கொண்டன.

இரண்டு மரங்களுக்கும் இடையே இடைவெளி இருந்தது. அதன் மத்தியில் அவன் நடைபயில உரல் சிக்கிக் கொண்டது. தேர் இழுப்பது போல வடங்கொண்டு வலித்தான். நெடுமரங்கள் படுமரங்கள் ஆயின; வேரோடு முறித்துக் கொண்டு பாரோடு விழுந்தன. மரத்தின் முறிவும் அவற்றின் சரிவும் பேரிரைச்சலை உண்டு பண்ணின.

காற்று இல்லை; கடிய மழை இல்லை; நேற்று வரை நின்றிருந்த மரங்கள் இன்று இல்லை என்னும் பெருமையை உலகுக்குக் காட்டின; அடையாறு ஆலமரத்தின் அவல நிலை இதற்கு ஏற்பட்டது. அதைத் தூக்கி நிறுத்தி விட்டனர். இதை எடுத்து நிறுத்த முயலவில்லை.