சத்தான நாடகங்களையும் சமுதாயச் சந்தைக்கு வழங்கி, மக்களின் மனத்தில் வேரோடிப் போயிருந்த அறியாமையைக் களைந்தெறிந்த பேராளர் அண்ணா அவர்களாவார்.
'கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக' - இது போன்ற கருத்துக்களை இராமலிங்க அடிகளார் போன்ற சான்றோரால் சொல்லத்தான் முடிந்தது; அதனைச் செயல்படுத்த அவர்களால் ஏனோ முடியாமல் போய்விட்டது.
ஆனால் அந்தப் புனிதக் கருத்துக்களை நெஞ்சில் நிறுத்தி, இதிகாச புராணங்கள் போதிக்கும் போதனைகளில், சடங்கு, சம்பிரதாயங்களில் - சாதி, சமயங்களில் உடும்புப்பிடியாக இருந்துவந்த தமிழ்ச் சமுதாயத்தை, அறிவால்-ஆற்றலால்-அடக்கத்தால்-சகிப்புத் தன்மையால் நாளாவட்டத்தில் மாற்றியமைத்த நாயகர் டாக்டர் அண்ணா அவர்களாவார்.
இருட்டறையில் உறங்கிக் கிடந்த 'திருக்குறள்' போன்ற நவமணிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, மனித உள்ளங்களைப் பக்குவப்படுத்தும் மேனாட்டு மேதைகளின் கருத்துக்களை வரிக்கு வரி விளக்கிக் காட்டி, குடத்தினிலிட்ட விளக்காக இருந்த தமிழர்களைக் குன்றின்மேல் ஏற்றிய முதற்பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் பேராளர் அண்ணா அவர்கள் 'இடிதாங்கி' போல் விளங்கி நம்மை ரட்சித்தவர்.