உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கண்ணாயிரத்தின் உலகம் !
(நாடகம்)

'ஒரே உலகம்' என்பது நேர்த்தியான ஒரு குறிக்கோள்.

பற்பல நாடுகள் கொண்ட பூபாகம் ஒரே அமைப்பாக இருக்கிறது என்பதல்ல 'ஒரே உலகம்' என்ற குறிக்கோளின் பொருள். பற்பல நாடுகள் உள்ளன என்பதாலேயே, பல்வேறு முரண்பாடுகள், வேறுபாடுகள், அவை காரணமாக மாச்சரியங்கள், மோதுதல்கள், ஆதிக்கங்கள், அவதிகள், அழிவுகள் நெளிகின்றன. இதனால் ஒரே அமைப்பாக உள்ள உலகம், 'ஒரே உலகம்' என்ற நேர்த்தியான நிலை அடையவில்லை.

வெள்ளை உலகம்; கருப்பு உலகம்; மாநிற உலகம்; மஞ்சள் நிற உலகம் என்று நிறம் காரணமாக, ஒரே அமைப்பாக உள்ள பூபாகம், பல்வேறு உலகங்களாக இருந்திடக் காண்கிறோம்.

இஸ்லாமிய உலகம்; கிருத்தவ உலகம்; பௌத்த உலகம்; இந்து உலகம்; ஆதிமத உலகம் என்று மத அடிப்படையில் பல உலகங்கள் உள்ளன என்று உணருகிறோம்.

மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி என்று இருபெரும் பிரிவுகளாக உலகம் இருப்பதாகவும், இந்தப் பிரிவு ஒவ்வொன்றும் தனித்தனி உலகம் என்றும் கூறுகின்றனர். காரணமும் காட்டுகின்றனர்..