பக்கம்:கண் திறக்குமா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

133


பணமும் கொடுத்துவிட்டுப் போவார். அத்துடன் எங்கள் ‘நாடகம்’ நிற்காது. அவருடைய தன்னலமற்ற சேவையைப் பாராட்டி நான் பேசுவேன்; என்னுடைய தன்னலமற்ற சேவையைப் பாராட்டி அவர் பேசுவார். வேலையற்ற நிருபர்கள் அந்த வைபவத்தை பற்றிப் பத்திரிகைகளுக்குப் பத்தி பத்தியாகச் செய்தி அனுப்புவார்கள். இப்படியாக எல்லாம் ஒரே வேடிக்கையாகயிருக்கும். வருகிறாயா, உன்னையும் அந்தப் பெரிய மனிதருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். பாவம், அவரும் ஒருவிதத்தில் என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர் தான். நான் ஒரு வழியில் பிரபலமடையப் பார்க்கிறேன்; அவர் இன்னொரு வழியில் பிரபலமடையப் பார்க்கிறார். என்னுடைய வழியில் பணத்துக்குச் செலவில்லை; அவருடைய வழியில் பணத்துக்குச் செலவிருக்கிறது. ஆனால் பலன் என்னவோ ஒன்று தான்! - என்ன செய்வது, மக்கள் ஆட்டு மந்தையாக இருக்கும்வரை நாம் வேட்டை நாய்களாக இருக்க வேண்டியதுதானே? - என்ன சொல்கிறாய், இப்படிப்பட்ட வைபவங்களில் கலந்து கொண்டால்தான் நீயும் சீக்கிரத்தில் பெரிய மனிதனாக முடியும்...’

‘ஐயோ, வேண்டாம். அதைவிடச் சின்ன மனிதனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்!”

‘அதற்கு நீ உன் தொழிலை விட்டு விட்டுச் சிறைக்குச் சென்றிருக்கக் கூடாது?!’

‘அதனாலென்ன?”

‘'எது எப்படியானாலும் இப்போது குடும்பம் நடந்தாக வேண்டுமே?”

‘குடும்பம் நடக்காமல் எங்கே போகிறது? எல்லோரும் அவரவர்கள் குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தால் தேசம் உருப்படுவது எப்படி?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/136&oldid=1379131" இலிருந்து மீள்விக்கப்பட்டது