பக்கம்:கண் திறக்குமா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

87

சொல்லியிருக்கிறார்’, அவர் ஊரில் இல்லை, நாளை வேண்டுமானால் பார்க்கலாம்’ ‘இப்பொழுது உங்களைப் பார்க்க முடியாததற்காக வருந்துகிறார்!’ - இப்படி ஏதாவது சொல்லி, அவனுடைய பொறுமையை முடிந்தவரை சோதிக்க வேண்டும். அதற்குள், ‘அவன் சுரணையுள்ளவனா, இல்லாதவனா?’ என்று தெரிந்துவிடும். அதற்குப் பிறகு சுரணையில்லாதவனாயிருந்தால் அவனுக்குப் பேட்டியளிக்கலாம்; சுரணையுள்ளவனாயிருந்தால் பேட்டியளிக்கக் கூடாது - அது ஒரு வேளை ஆபத்தில் கொண்டு வந்து விட்டாலும் விடலாம் - இப்படியெல்லாம் நடந்து கொண்டு வந்தால் சமூகத்தில் நமக்குத் தானாகவே மதிப்பு ஏற்பட்டுவிடும். அப்புறம் யாராவது ஏதாவது கூட்டத்தைக் கூட்டி அதில் கலந்துகொள்ள நம்மை அழைப்பார்கள். அப்படி யாரும் அழைக்காவிட்டாலும் அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை; நம்முடைய செலவிலேயே ஏதாவது ஒரு காரணத்தை நாம் முன்னால் வைத்துக் கூட்டத்தைக் கூட்டலாம்; அந்தக் கூட்டத்தில் ஆகாயத்திலிருந்து திடீரென்று கீழே குதித்தவனைப் போலப் பிரசன்னமாகலாம்; பிரசங்கமாரி பொழியலாம். மக்கள் அவனுடைய பேச்சைக் கேட்க வராவிட்டாலும், அவனைப் பார்ப்பதற்காகவாவது நிச்சயம் விழுந்தடித்துக் கொண்டு வருவார்கள்!”

என்னால் பொறுக்க முடியவில்லை. கட்டிலை விட்டுச் சட்டென்று கீழே குதித்து, “ஐயோ, என்னிடம் ஏன் இந்த அபத்தங்களையெல்லாம் சொல்லித் தொலைக்கிறீர்கள்? - நீங்கள் நினைப்பதுபோல் நான் நிச்சயம் பெரிய மனிதனாகப் போவதில்லை!” என்றேன் வெறுப்புடன்.

இதைக் கேட்டதும் அவர் துள்ளிக் குதித்து, “அடிசக்கை, இதுகூடப் பெரிய மனிதனாவதற்கு நல்ல வழிதான்! - அதாவது, பெரியமனிதனாகப் போவதில்லை’ என்று சொல்லிக்கொண்டே ‘பெரிய மனிதனாவது! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/90&oldid=1378752" இலிருந்து மீள்விக்கப்பட்டது