பக்கம்:கண் திறக்குமா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

89

“ஸ்நானம் செய்துவிட்டு வாருங்கள்; தருகிறேன்!” என்றார், அவரும் சிரித்துக் கொண்டே.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஸ்நானம் செய்து விட்டு வந்து, “எங்கே விஷம்?” என்று கேட்டேன்.

மேஜை மீதிருந்த காப்பியைச் சுட்டிக் காட்டினார்; எடுத்துக் குடித்தேன்.

அதற்குள் சாந்தினி வந்து, “நான் வரட்டுமா, அப்பா!” என்று ஆஸ்பத்திரிக்குச் செல்ல விடை கேட்டாள்.

“போய் வா, அம்மா!” என்றார் அவர்.

போகிற போக்கில் அவள் என்மீது ஒரு கடைக்கண் பார்வையை வீசிவிட்டு, வாசலில் காத்திருந்த காரில் ஏறிக் கொண்டாள். நான் பாரிஸ்டரை நோக்கி, “உங்களுடைய பெண்ணைப் போலவே நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் புருஷனை நம்பி வாழாத புதுமைப் பெண்ணாக மாறிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்றேன்.

“அதற்கு எல்லாத் தகப்பன்மார்களும் என்னைப் போலவே வக்கீலாயிருந்து நியாயத்தைக் கொல்ல வேண்டுமே!” என்றார் அவர்.

நான் சிரித்தபடி, “நாடு விடுதலையடைந்துவிட்டால் அதற்கு அவசியம் இருக்காது; எல்லாக் குழந்தைகளையும் சர்க்கார் தங்கள் செலவிலேயே படிக்க வைத்து விடுவார்கள்!” என்றேன்.

“பலே, பிரசாரத்துக்கு இது ஓர் அருமையான வார்த்தையப்பா! - நாடு விடுதலையடையும் வரை இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கலாம், விடுதலையடைந்த பிறகு நாட்டின் பொருளாதார நிலையைச் சுட்டிக் காட்டி அதைச் சுலபமாகத் தட்டிக் கழித்து விடலாம்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/92&oldid=1378762" இலிருந்து மீள்விக்கப்பட்டது