பக்கம்:கண் திறக்குமா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

95

அடுத்த கணம் அவள் கண்ணால் அழைத்தாள்; காந்தக் கல்லைக் கண்ட ஊசி போல என்னை ஏதோ ஒரு சக்தி உந்தித் தள்ள, நான் அவள் நிற்குமிடத்தை அடைந்தேன். அவள் அங்கிருந்த ஒரு ‘ரிக்ஷாவாலா’வைக் கூப்பிட்டாள்; அவன் வண்டியுடன் விரைந்தோடி வந்து அவளுக்கு முன்னால் நின்றான்.

நிலையில்லாத உயிரின்மீது அவனுக்கு ஏன்தான் அவ்வளவு ஆசையோ, தெரியவில்லை - இல்லை யென்றால் மனிதனாய்ப் பிறந்த அவன் ஏன் மாட்டின் தொழிலை மேற்கொண்டிருக்கப் போகிறான்? - மனிதர் நோக மனிதர் பார்க்கும் சமுதாயத்தைத்தான் அவன் ஏன் சும்மா விட்டிருக்கப் போகிறான்?

அந்த ஜீவனிடம் ‘சில புண்ணியாத்மாக்க’ளைப் போல இரக்கங் காட்ட என் மனம் இடங் கொடுக்கவில்லை - அப்படிக் காட்டுவது ஆட்டுக்குட்டியிடம் ஓநாய் இரக்கங் காட்டுவது போலாகுமல்லவா? - ஆகவே, அந்தப் பக்கமாக அப்போது xடிக்கொண்டிருந்த டிராம் வண்டியில் நான் தொத்திக்கொண்டு, அவளையும் வந்து ஏறிக்கொள்ளும்படி என் கண்ணால் அழைத்தேன்.

என்னுடைய அழைப்பை அவள் தட்டவில்லை; ஏறிக் கொண்டாள். இருவரும் திருவல்லிக்கேணியில் இறங்கி, கடற்கரையை நோக்கி நடந்தோம்.

“அநேகமாக எல்லாக் கதாநாயகர்களுக்கும் கடற் கரையில்தானே காதல் உதயமாகியிருக்கிறது? நம்முடைய காதலும் அங்கேயே உதயமாகட்டுமே!” என்றாள் அவள்.

“அதுதான் ஆஸ்பத்திரியிலேயே உதயமாகி விட்டதே!” என்றேன் நான்.

“ரொம்ப அழகுதான்? - போயும் போயும் காதல் ஆஸ்பத்திரியில்தானா உதயமாக வேண்டும்?” என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/98&oldid=1379041" இலிருந்து மீள்விக்கப்பட்டது