பக்கம்:கதாநாயகி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம் ❖ 111


அம்பலத்தரசனுக்குப் புரிந்துவிட்டது. அதோ, பூமிநாதன் வந்துவிட்டார்!

அவன் ஊகம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பலிதமடைந்தது.

வந்துவிட்டான் பூமிநாதன். ‘ஈவினிங் இன் பாரிஸ்’ வாசம் மூக்கைத் துளைத்தது. 'மார்னிங் இன் மண்ணடி' என்று ஒரு புது வாசனைத் திரவியம் புழக்கத்தில் இருக்கக் கூடாதா?

“வாங்க பூமிநாதன்!”

“ஆமாம்,” என்று சொல்லியப்படி பொன் நகை ஏந்தி அறையில் நுழைந்தான் பூமிநாதன். அவனுடன் இளம்பரிதிக்கதிர்களும் நுழைந்தன.

“உட்காருங்க,” என்று சொல்லிச் சோபாவைக் காட்டினான் அம்பலத்தரசன்.

முகக்ஷவரம் செய்திருந்தான் பூமிநாதன். முதுகைச் சாய்த்து அமர்ந்தான். பவுடர் பூசப்பட்டிருந்த மாநிறக் கன்னங்களில் அங்கங்கே மெல்லிய இழைகளாக் கீறல்கள் இரண்டொன்று லேசாகத் தெரிந்தன. ‘ஃப்யூஜி ஸில்க்’ சட்டை பளபளத்தது. ‘மைனர் சங்கிலி’ கழுத்துக்கு வரம்பறுத்திருந்தது. அவன்கழுத்து பத்திரமாகவே இருந்தது.

பூமிநாதனின் மீதிருந்த பார்வையை அழுத்திவிட்டபோது, அவனிடம் நூதன மாறுதல் ஒன்றையும் அம்பலத்தரசன் கவனிக்க வேண்டியவன் ஆனான். “ஓஹோ!... மீசை புதுசு போலிருக்கு! கனஜோராக இருக்குங்க. நாடகத்திற்காக வச்சிருந்த மீசையைச் சாசுவதமாக்கிக்கிட்டீங்க போலே...!” என்றான் அவன்.

பூமிநாதன் வெட்கத்தோடு சிரித்தான். வெட்கத்திற்கும் ஆண்மை இருந்தது. ஆண்மைக்கும் வெட்கம் புதிதல்ல!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/121&oldid=1323584" இலிருந்து மீள்விக்கப்பட்டது