இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்தக் கதையின் கையெழுத்துப் பிரதியை அதாவது, லூயி கரால் முதல் முதலாக எழுதினாரே, அந்தப் பிரதியை எப்படியாவது விலைக்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பல பிரபுக்கள் நினைத்தார்கள். அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. கடைசியாக, ஓர் ஆங்கிலேயர் சுமார் 2,50,000 ரூபாய் கொடுத்து அதை வாங்கினார். ஆனால், அடுத்த ஆண்டே, அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஓர் அமெரிக்கர் அவரிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்து, அதை வாங்கிக் கொண்டு போய் விட்டார் ! அந்த அமெரிக்கர் மிகவும் நல்லவர். அவர் அதை வெகு காலம் வைத்திருக்கவில்லை. லண்டனிலுள்ள பிரிட்டிஷ் மியூஸியத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார். இன்றும் அது அங்கே இருக்கிறது. அதைப் புரட்டிப் பார்த்தால், லூயி கராலின் கையெழுத்தை மட்டுமல்ல; அவர் வரைந்த படங்களையும் அதிலே காணலாம்!
18