உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லாம் அடிக்கடி கதறுவார். கையைக் காலை உதறுவார்; துடிதுடிப்பார்; துள்ளிக் குதிப்பார். கதையில் வரும் பொல்லாத அரசன் எப்படி எப்படியெல்லாம் அவஸ்தைப் பட்டான்? அதைத்தான் அவர் நடித்துக் காட்டினார். அவரது கதையும், நடிப்பும் குழந்தைகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஊட்டின. வயிறு குலுங்கக் குலுங்க அவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

இப்படி, அந்தக் குழந்தைகளைக் குதூகலப் படுத்துவதற்காக அவர் கூறிய கதைகளெல்லாம் சேர்ந்து பின்னர், ஒரு புத்தமாக வெளி வந்தன. குழந்தைகளிடம் அவர் கொண்ட பேரன்பின் நினைவுச் சின்னமாக இன்றும் அப்புத்தகம் விளங்குகின்றது.

விக்டர் ஹ்யூகோ 1802-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய பாட்டனார் ஒரு தச்சர். பாட்டி ஒரு விவசாயியின் மகள். ஆனால், தகப்பனாரோ ஒரு போர் வீரர்! ஆம், ஐரோப்பாக் கண்டத்தையே ஆட்டி வைத்த நெப்போலியனிடம் அவர் போர் வீரராகச் சேர்ந்தார். விரைவில் படைத் தலைவரானார்.

தந்தை போர் வீரராயிருந்ததால், அடிக்கடி அவர் வெவ்வேறு ஊருக்குச் செல்வார். வெளி நாடுகளுக்கும் செல்வதுண்டு. அதனால், பிள்ளைப் பருவத்திலே ஹ்யூகோ பல இடங்களுக்கும் செல்ல நேர்ந்தது. ஐந்து வயதுச் சிறுவராயிருக்கும் போதே, அவர் இத்தாலி தேசத்தைச் சுற்றிப் பார்த்திருக்கிறாராம்!

தந்தை நெப்போலியனுடன் சேர்ந்து போர் புரிந்தாலும், தாயாருக்கு நெப்போலியன் என்றாலே பிடிக்காது. “யுத்த வெறி பிடித்தவன். நாடு நகரத்தையெல்லாம் அழித்து, ஒன்றும் அறியாத பிள்ளை குட்டி-

28