பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பின்னும் ஓரிடத்தில்,
   "நற்ற வாஉன்னை நான்ம றக்கினும்
     சொல்லுநா நமச்சி வாயவே"
என்கிறார். இறைவன் நாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகிப் போனதால் அவர் இறைவனை மறந்தாலும் அவருடைய நாக்கு அவன் நாமத்தை மறக்காமல் சொல்கிறதாம்.

அத்தகைய நிலை நமக்கும் வரவேண்டுமென்றால் இப்பொழுதிலிருந்தே பழகி வர வேண்டும். யமன் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், அவன் இப்போது வருவேன் என்று அறிக்கை அனுப்பிவிட்டு வர மாட்டான். எப்போது வருவான் என்பதை நாமாகத் தெரிந்து கொள்ளவும் முடியாது. ஆகவே, இப்பொழுதிலிருந்தே அயில் வேலன் கவியைச் சொல்லிப் பழகினால் இறக்கும் பொழுது வேலன் நினைவு வரும். அந்தச் சமயம் அவன் ஓடோடியும் வந்து காப்பாற்றுவான்.

கலந்து பாடுதல்

வாக்கிலே கவி வந்துவிட்டால் மாத்திரம் போதாது. வாக்கிலே வரும் கவி எண்ணத்திலே பல சமயங்களில் வருவது இல்லை. இறைவன் திருநாமம் வெறும் பெயர் மாத்திரம் அல்ல. அதற்குச் சிறப்பான பொருள் உண்டு. அதனாற் பெறும் உணர்ச்சியும் உண்டு. அன்போடு சொல்லச் சொல்ல, அது மனத்திலே ஏறி, அதன் பொருள் உள்ளத்திலே தங்கும்; அதனுடைய சாரம் மனத்திலே பதியும்; அதனால் எழுகின்ற உணர்ச்சி பதியும். இறைவன் பற்றும் உண்டாகும். பிறகு இன்ப அநுபவம் உண்டாகும். அன்பினால் சொன்னால்தான் படிப்படியாக இந்த அநுபவங்கள் ஏற்படும்.

ஒரு பெண் இருக்கிறாள். அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஆறுமுகம் என்று ஒரு பையன் இருக்கிறான். அவன் பெயரைப் பலர் கூப்பிடக் கேட்கிறாள் அந்தப் பெண். அந்தப் பெயரைக் கேட்கும் போது எந்தவிதமான உணர்ச்சியும் அவளுக்கு உண்டாவதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறது. அவளுடைய கணவர் பெயரும் ஆறுமுகம் என்பதுதான்.

94