பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறிஞ்சிக் கிழவன்

என்று நக்கீரரை மரியாதையாகச் சொல்வதால் அவற்றைப் பாடியவர் வேறு ஒருவரே என்று தெரிகிறது. தம்மைச் சொல்லிக் கொள்ளும்போது நக்கீரர் என்று மரியாதையாக அவரே சொல்லிக் கொள்வாரா?

நக்கீரர் பாடாவிட்டால் என்ன? அந்தப் பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன; உள்ளம் கலந்து கரைந்து பாடிய பாடல்களாக உள்ளன.

'என்றும் இளையவனாய், சதாபால ரூபத்தோடு இருக்கின்ற குழந்தையை, இளங்குருத்தை, பச்சிளம் பாலகனை, கிழவன் என்று குவலயம் சொல்கிறதே! இது என்ன பேதைமை என்று பாடும் இப்பாட்டில் அருணகிரியார் ஆண்டவனது அவதாரத்தையும், அவனது திருவிளையாடல்களையும் மிக அலங்காரமாகப் புலப்படுத்தியுள்ளார்.

திருந்தப் புவனங்கள் ஈன்றபொற்
பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில்
ஏறி அறுவர்கொங்கை
விரும்பிக் கடல்அழக் குன்றழச்
சூர்அழ விம்மிஅழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன்என்று
ஒதும் குவலயமே!

(உலகத்து உயிர்கள் யாவும் மலம் நீங்கித் திருத்தம் பெறும் பொருட்டுப் புவனங்களை ஈன்றவளும், செம்பொன்னாலான பதுமையைப் போன்றவளுமாகிய அம்பிகையின் அழகிய முலைப் பாலை உண்டு, சரவணப் பொய்கையில் தாமரைப் பூவாகிய தொட்டிலில் ஏறி, சூரன் ஒளிய இருக்கும் கடல் அழவும், கிரெளஞ்சமாகிய மலை அழவும், சூரன் அழவும் விம்மி அழுத குருத்துப் போன்ற இளங்குழந்தையாகிய முருகனை, உலகத்தார் குறிஞ்சிக் கிழவன் என்று கூறுகிறார்கள்.

புவனங்கள்: உபலட்சணத்தால் தனு கரண போகங்களையும் கொள்ள வேண்டும். பொற்பாவை: அன்மொழித்தொகை. சரவணத்தில் உள்ள பூவாகிய தொட்டில். அறுவர்: தொகையால் புலனாகும் குறிப்புச் சொல். கொங்கை: ஆகுபெயர்; பாலுக்காயிற்று. சூர்: உயர்திணையை அஃறிணை வாய்பாட்டில் சொன்னது; அரசு, அமைச்சு என்பன போல. குருந்து - குருத்து; மிக்க இளமையைப் புலப்படுத்தியபடி. குவலயம்: ஆகுபெயர்; உலகத்தோருக்கு ஆயிற்று.)

187