பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

வாழ்க்கையில் ஆன்மாக்களாகிய உயிர்கள் இன்றைக்கு என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறதோ அதையே வள்ளியம்மை செய்கிறாள். இந்த உலகம் விரிந்திருக்கிறது. உயிர்கள் எல்லாம் உடம்பைப் பெற்று, பொறிகளின் வாயிலாக இன்ப துன்பங்களை நுகர்ந்து திரும்பத் திரும்ப இறந்தும் பிறந்தும் வருவதற்கு நிலைக்களமாக இந்த விரிந்த உலகம் அமைந்திருக்கிறது. உலகத்தில் விளைகின்ற பொருள்களை அநுபவித்துக் காத்து, அவற்றைத் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உரிய பொருளாகவே வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆன்மாக்கள் காவல் புரிகின்ற பெரிய கொல்லையாக ஆண்டவன் இந்தப் பூமியை அமைத்திருக்கிறான்.

தினையும் நெல்லும்

லைச்சாரலில் உள்ள நிலத்தில் அதிக உழைப்பு இல்லாத தினைப் பயிரையும் விளைவிக்கலாம். அருவியிலே வருகின்ற தண்ணீரைத் தேக்கிப் பாய்ச்சி நன்செய்ப் பயிரான நெல்லையும் விளைவிக்கலாம். ஆனால் குறமகளான வள்ளி சின்னத் தினையைக் காத்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெரிய வீட்டில் அறியாமை உடையவளான, பேதைப் பெண்ணான, வள்ளி எப்படி மிகவும் சின்னத் தினையைக் காத்துக் கொண்டிருக்கிறாளோ அதைப் போலவே இந்த அகன்ற உலகத்தில் அறியாமையை உடைய உயிர்கள் சிற்றின்பத்தையே அநுபவித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மலைச்சாரலில் உள்ள நிலத்தில் சக்தி உடையவர்கள், உழைப்பு உடையவர்கள், நன்செய்ப் பயிரான நெல்லைப் பாடுபட்டு உற்பத்தி செய்வது போல, இந்த விரிந்த உலகத்தில் அருட்செல்வர்கள் சிற்றின்பம் அல்லாத, எல்லையில்லாத, பேரின்பத்தைத் தம் உழைப்பினால் விளைத்து இன்பத்தை அடைவார்கள். பணக்காரர்கள் புசிப்பது நெல்; ஏழைகள் உண்பது தினை. அருட்செல்வர்கள் நுகர்வது பேரின்பம்; அருள் இல்லாத ஏழைகள் அநுபவிப்பது சிற்றின்பம். சிற்றின்பத்தைக் கிஞ்சித் போகம் என்றும், பேரின்பத்தை மகா போகம் என்றும் சொல்வார்கள். பேரின்பத்தை விளைவிக்கக் காரணமான நெல் இவ்வுலகத்தில்தான் விளைகின்றது, இவ்வுலகத்திலே,

"யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்"
196