பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

என்று சொல்கிறோம். "எப்படி இனிக்கும்?" என்று கேட்டால் வேறு பொருள் எதையாவது சுட்டிக் காட்டித்தான் விளக்க முடியுமே அன்றி வார்த்தை அளவைக் கொண்டு விளக்க முடியாது; அல்லது சர்க்கரையை வாயில் போட்டுத்தான் அந்த இனிப்பு அநுபவத்தை உணர்த்த வேண்டும். இறைவனுடைய அருளால் கிடைக்கும் அருளநுபவங்களும் அத்தகையனவே. தாய்க்கும் மகளுக்கும் நெருங்கிய அன்பு உண்டு. தாய் எத்தகைய பரம இரகசியங்களையும் தன் மகளிடம் சொல்வாள். ஆயினும் மணாளனோடு ஆடிய இன்பத்தைச் சொல் என்று மகள் கேட்டால் அதனை அவள் எப்படிச் சொல்வாள்? சொல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் சொல்ல முடியாது.

"மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய -
சுகத்தைச் சொல்எனிற் சொல்லுமாறு எங்ங்னே?”
(திருமூலர்)

குறிப்பாகச் சொல்லுதல்

ந்திரியங்களுக்கு உட்பட்டு நாம் அநுபவிக்கிற சிற்றின்பமே எடுத்துச் சொல்வதற்கு அரியதாக இருக்கிறதென்றால், இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் கிடைக்கும் பேரின்பத்தை எப்படிச் சொல்லில் அடக்கிச் சொல்ல முடியும்? ஆனாலும் அதை உபமான வாயிலாகப் பெரியோர்கள் சொல்வார்கள். தமக்குத் தெரிந்த ஒன்றைப் பிறருக்கும் சொல்ல வேண்டுமென்ற கருணையுடையவர்கள் அவர்கள். சொல்லக் கூடியவற்றையே, இரகசியமான பாஷையில் (Code) அரசியல் துறையில் சொல்லுகிறார்கள். அந்த இரகசிய பாஷை தெரிந்தவர்களுக்கு மட்டுமே அது தெரிய வேண்டும், பிறருக்குத் தெரியக் கூடாது என்பதுதான் காரணம். அதைப்போலவே சமயத் துறையிலும் பல சித்தர்கள் தாங்கள் அடைந்த இன்பப் பேற்றை, சொல்ல முடியாத இன்ப அநுபவங்களை, குறிப்பாகப் பல பாடல்களில் குறிப்பித்தார்கள். அந்தப் பாடல்களை நாம் எவ்வளவு முறை படித்தாலும் ஒன்றும் புரியாது. மிகவும் வேடிக்கையாக இருக்கும். சில சமயங்களில் அர்த்தமற்ற பாட்டாகக்கூட இருக்கும். சொல்லக்கூடாது என்பதற்காகச் சொல்வது அன்று இது, சொல்ல முடியாமையால் இப்படிச் சொல்கிறார்கள்.

254