பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 ஆறு பொருள்கள் அருணகிரியார் இங்கே ஆறு பொருள்களைச் சொன்னார். முருகப் பெருமான் ஷண்முகநாதன் அல்லவா? முருக பக்தர்கள் ஆறு ஆறு என்று எண்ணுவதில் ஆனந்தம் காண்பார்கள். ஆறு என்ற எண்ணே அவர்களுக்கு ஆறுமுகநாதனை நினைவு ஊட்டும். ஆண்டவன் சந்நிதானத்தில் வணங்கினால் ஆறு முறை வணங்குவார்கள். வலம் வந்தால் ஆறு முறை வருவார்கள். யாராவது பணம் கேட்டால் ஆறு ரூபாய் கொடுப்பார்கள் ஆறெழுத்து ஜபிப்பார்கள். திருப்புகழில் ஓரிடத்தில் முருகனடியார்களாகிய மாதவர்கள் திருநீறு அணிவதைச் சொல்கிறார் அருணை முனிவர். அவர்கள் ஆறுமுகம் ஆறுமுகம் என்று சொல்லி அணிகிறார்களாம். அதை ஆறு தடவை சொல்கிறார்களாம். ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் - என்று பூதி ஆகமணி மாதவர்கள் முருகனுடைய திருக்கோலத்தை நினைப்பூட்டுகையில் இங்கே ஆறு பொருளைச் சொல்கிறார். எம்பெருமான் மருங்கில் அணிந் துள்ள சேலையை நினைக்கச் செய்கிறார். கட்டிய சீராவை நினைக்கச் செய்கிறார். கையில் அணிந்துள்ள சிவந்த செச்சை மாலையை நினைப்பூட்டுகிறார். சேவல் பதாகையையும் பார்க்கச் சொல்கிறார். தோகையையும் காட்டி, வாகை மாலையையும் கண்டு களிக்கச் செய்கிறார். ஆக ஆறு பொருள்களை அழகாகக் காட்டுகிறார். குறிப்பு 'உலகத்தில் பிறந்தவர்கள் செத்துப் போகிறார்கள். சாகின்ற துன்பம் மிகப் பெரிய துன்பம். அந்தத் துன்பம் போகவேண்டு மென்றால், எம்பெருமானின் திருவுருவத்தை மனத்திரையில் எழுதிக்கொண்டு காலையும் மாலையும் நினைந்து வாழ வேண்டும். அப்படிச் செய்தால் எம்பெருமானின் திருவுருவம் நீ இறக்கின்றபோது, உன்னுடைய மாலையில் வந்து முன் நிற்கும். பின்னர் மறுபிறவி எடுத்தாலும் பிறப்பாகிய காலையில் வந்து நிற்கும்' என்பதை இப்பாட்டில் புலப்படுத்துகிறார். 278