பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பட்டு, எம்பெருமானிடத்தில் இடையீடில்லாத அன்பு வைத்து, அந்த அன்பின் பயனாக அவனுடைய அருள் ஒளி கிடைக்கு மானால், அப்போது உள்ளக் கமலம் விரிகிறது; விரியும்போது அவன் தன்னுடைய காட்சியைக் காட்டுகிறான். அப்போது மெல்ல மெல்ல நம்முடைய செயல் மாண்டு வருகிறது. அதற்குப் பயனாக இன்ப ஊற்று மெல்ல மெல்லப் பெருகுகிறது. ஊற்றும் மறைதல் இன்பம் ஊற்றாக எழுந்தது. எப்போதும் ஊற்றாக ஒடிக் கொண்டிருக்கவில்லை. அது பெரிய கடல் ஆயிற்றாம். சிறிய விதை ஒன்றை நடுகிறோம். அந்த விதை இரண்டு இலை விடுகிறது. அதோடு நிற்பது இல்லை. அது மரமாகிறது. அது இலை விடும் போது தன்னை மாய்த்துக் கொள்கிறது. வித்து மாய்ந்து மரம் ஆகிறது. ஒரு தேங்காய் நடுகிறோம். நட்ட பிறகு நாம் தேங்காயை எடுக்கலாம். ஆனால் நட்ட தேங்காயை எடுக்க இயலாது. ஒரு தேங்காய் நட்டால் ஆயிரம் தேங்காய் வரும்; நட்ட தேங்காய் வராது. அது தன்னை மாய்த்துக் கொண்டு பல தேங்காயைத் தருகிறது. அப்படியே இங்கே புத்திக் கமலம் விரிகிறது. அதிலிருந்து ஊற்று ஊறுகிறது. புறப்பட்டு வெள்ள மாகப் பெருகுகிறது. நான்கு புறமும் பெருகிக் கரை காணாமல் நிற்கிறது. வெள்ளம் பெருகப் பெருக அது செல்லும் இடங்களில் உள்ள பொருள்கள் மறையத் தொடங்குகின்றன. புறப்பட்ட இடமே மறைந்து போகிறது. புறப்பட்ட ஊற்றுக் கண்ணை மறைத்து, கரைகளை எல்லாம் மறைத்து, கரைகளுக்கு அப்பா லுள்ள மேடுகளை மறைத்து, மேடுபள்ளம் என்ற வேறுபாடு தெரியாமல் செய்து எங்கும் ஒரே வெள்ள மயமாக நிற்கிறது. வெறும் ஊற்றாக இருக்கும்போது ஊற்றுக் கண் தெரிந்தது; மற்ற இடங்களும் தெரிந்தன; கரைகளும் தெரிந்தன; மேடுபள்ளம் எல்லாம் தெரிந்தன. ஆனால் ஊற்று, கடலான பிறகு ஒன்றுமே தெரியவில்லை. அப்படியே ஆனந்தத்தேன் ஊற்று எடுக்கும் போது மேடுபள்ளம் என்ற வேறுபாடு சற்றே தோற்றலாம். ஆனந்தம் வெள்ளமாகப் பெருகிப் பரமானந்தக் கடலான பிறகு முன்னாலே கண்ட கரை மேடு பள்ளங்களில் ஒன்றும் தெரியாது. 296