பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி தினைப் போதளவும் ஓங்காரத்து உள்ஒளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கார்; தொழும்பு செய்யார் என்பது அடுத்த பகுதி. இந்த இரண்டு பகுதியிலே சொல்லும் கருத்துக்களில் வேறுபாடு உண்டு. தலையளவும் கடையளவும் ஒரு தகப்பனார், தம் குழந்தை ஆங்கிலத்தில் நல்ல புலமை பெறவேண்டுமென்று விரும்புகிறார். அவனோ படிப்பதில்லை. அவனைப் பார்த்து, அடே, ஆங்கிலத்தில் நல்ல அறிவு வேண்டு மென்றால் ஷேக்ஸ்பியர் படிக்க வேண்டும்; மில்டன் படிக்க வேண்டும். ஒன்றும் படிக்கவில்லை. ஆங்கிலப் பத்திரிகையின் தலையங்கமாவது படிக்கக் கூடாதா?’ என்று சொல்லுகிறார். ஷேக்ஸ்பியர், மில்டன் போன்ற கவிஞர்களின் நூல்களைப் படிப்பது சிறந்த நிலை. அது முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் ஆங்கிலப் பத்திரிகையின் தலையங்கம் படிப்பது. இது இருந்தால் நாளடைவில் அது வரும். அப்படி, ஆங்காரம் அடங்கி ஒடுங்கி, பரமானந்தத்தே தேங்கி, நினைப்பும் மறப்பும் அறுவது தலை நிலை; இது மேலளவு (Maximum). இது வரவேண்டுமானால் இதற்குப் பல வழிகள் உண்டு. இறைவன் திருவருள் அநுபவம் கிடைத்துவிடும் என்று தெரிந்து கொள்வதற்கு அறிகுறி ஒரு கணமாவது ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்க வேண்டும்; இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். இது மிகக் குறைந்த நிலை; தாழ்ந்த அளவு (Minimum). இந்த இரண்டு அளவுகளையும் அநுபவத்தில் கண்டால் என்ன பயன்? 'யமதூதரைக் கண்டு அஞ்சாமல் வாழலாம். மரணம் இல்லாத பெருவாழ்வு எய்தலாம்" என்று அந்தப் பயனைக் கடைசிப் பகுதியில் வைத்துச் சொல் கிறார் அருணகிரியார். இனி ஒவ்வொரு பகுதியாகப் பார்க்கலாம். ஆங்காரம் அடங்கல் ஆங்காரமும் அடங்கார்; ஒடுங்கார். 125