பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 இன்பத்தை மறுபிறவியில் பெற்றாலும் அதோடு நமக்கு நிறைவு வருகிறது இல்லை. பிறவி வரவர, ஆசைகளும் வளர்ந்து, ஆசை வளரவளர, பிறவியும் வளர்ந்து கொண்டு வருகிறது. ஒன்றுக் கொன்று தொடர்புடைய ஆசையும், பிறவியும் எந்தக் காலத் திலும் நிற்பதில்லை. ஆகவே, கண்வலை வீசுகின்ற பெண்டிருடைய இன்பத்தைப் பெற்றவர்கள் அதனால் நிறைவு பெறாமல் மீட்டும் மீட்டும் அதனைப் பெறவேண்டுமென்று எண்ணுகிறார்கள். அந்த ஏக்கம் அதிகமாக அதிகமாக, மயங்குகிறார்கள். இந்த நிலையை முதலில் அருணகிரியார் சொல்ல வருகிறார். தம்முடைய கண்ணைச் சேல் மீனைப் போல உருட்டி மயக்குகிறார்கள் பொது மகளிர். சேல்வாங்கு கண்ணியர். வாங்கு என்பது உவம வாசகம், சேல்போன்ற கண்ணை உடையவர் என்று பொருள். எத்தனையோ சேல்களை விலைக்கு வாங்கும் பேரழகுடைய கண்களை உடையவர்கள் என்று சொல்லலாம். பொதுவாக மகளிருடைய கண்களுக்குச் சேல் மீனை உவமமாகச் சொல்வது வழக்கம். இங்கே, பொது மகளிருடைய கண்கள் ஆயிரம் சேல்களினுடைய அழகையும் மிஞ்சி அவற்றை எல்லாம் விலைக்கு வாங்கும் கிளர்ச்சியை உடையது என்கிறார். அந்தச் சேலுக்கும் இந்தச் சேலுக்கும் வேறுபாடு உண்டு. கடலில் உள்ள சேல்மீன்கள் வலையில் படும். ஆனால் இந்தப் பொது மகளிருடைய கண்ணாகிய சேல் மீனோ தானே வலை வீசும். அந்த வலையில் காளையர்கள் படுவார்கள். மால்வாங்குதல் சேலைப் போன்ற கண்ணை உடைய பொது மகளிர், பாதை யிலே நான்குபேர் காணச் செல்லும்போது, அவருடைய கண் அழகை முதலில் கண்டு, பின்பு மேனியில் கண்ணை ஒச்சுகிறார் கள் காளையர்கள். பருவப் பூரிப்பை மார்பகத்தில் காணக் கண் செல்கிறது. அப்போது உள்ளம் சோர்ந்து அவர்களை அணைய வேண்டுமென்ற எண்ணம் முதிர்கிறது. சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேர எண்ணி. 288