பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 79
54 இதுவா, செயவேண்டிய சீர்திருத்தம்?
ஊருண்ணக் கொடுக்கின்ற உழவர்க்கிந் நாட்டில்
உருப்படியாய் ஒரு நலனும் செய்யவந்தார் இல்லை!
போருண்ணும் மாடுகள்போல் ஒருபுறத்தில் செல்வர்
புடைக்கவயி றுண்ணுகின்றார்! மறுபுறத்தில் சோற்று
நீருண்ணும் வாய்ப்புமின்றி நெடும்பசியில் மாளும்
நிலையின்றும் மாறவில்லை பலகோடிப் பேர்க்கு!
சீரெண்ணித் திருத்தவந்தார் எழுத்துகளை இங்கே!
செயவேண்டும் சீர்திருத்தம் எதுவென்று காணார் !
தொத்துபிணி யெனுஞ்சாதி இனுந்தொலைய வில்லை;
தொல்லைமதக் கேடுகளும் வளர்ந்துவரும் நாட்டில்!
செத்துசெத்துப் பிழைக்கின்றார் ஏழையரிம் மண்ணில்;
சிறு குடிலும் வாய்க்காமல் தெருக்களில்வாழ் கின்றார்.
ஒத்துவராக் கொள்கையினால் உழைப்பாளர் கூட்டம்
ஓயாத தொல்லைகளால் நலிகின்றார்! இன்னும்
எத்தனையோ சீர்திருத்தம் இங்கிருக்கப் பண்டை
எழுத்துகளைத் திருத்தவந்தார், எளிமையது வென்றே!
-1979