பக்கம்:கனிச்சாறு 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  115


கொடுமையெலாம் வாயரற்றும்! கீழ்ப்பாய்ச்சி கட்டும்
'கிறுக்கெல்லாம் உருக்குலையும்! செருக்கடங்கிப் போகும்!
நெடுமைநெடுங் காலமெலாம் ஆரியத்தின் கையால்
நெஞ்சொடிக்கப் பட்டகதை மாறிநடந் தேறும்! 8

மறத்தமிழன் ஆண்டகதை உடல்சிலிர்க்கக் கேட்கும்!
மானம்விழிப் புண்டகதை உலகமெல்லாம் பேசும்!
அறத்தமிழன் வாழ்ந்தபுகழ் ஆழ்கடலும் பாடும்!
அற்றையவன் வீழ்ந்தகதை மலைப்புழைகள் சொல்லும்!
செறுத்தெழுந்தே ஆரியத்தைத் தீய்த்தகதை வானில்
செங்கதிராய் விண்மீனாய்ப் புடவியெல்லாம் காய்ச்சும்!
புறத்தெழுந்த புதுப்பாட்டாய்ப் பொய்யழிந்த செய்தி
புதுப்பண்ணின் இசையொடு யாழ்நரம்பில் ஓடும்! 9

அந்த நன்னாள் விரைவில்வரும்! வரைவில்வரும்; எம்மோர்
அரசமைத்த செய்திதனை முரசொலித்துக் காட்டும்!
மந்தநடை போட்டதமிழ் மக்களெலாம் சேர்ந்து
மறக்களிற்று வெற்றிநடை போடும் ஒலி கேட்கும்!
சொந்தமொழி, சொந்தநிலம், சொந்தபண் பாட்டின்
சுவைநலன்கள் யாவையுமே விருந்தயரும் ஞாலம்!
தந்தனதோம்! தந்தனதோம்!
யாமெழுந்தோம்! தோம்! தோம்!
தமிழரெலாம் ஒன்றிணைந்தோம்!
ஒன்றிணைந்தோம்! தோம்! தோம்! 10

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/151&oldid=1424773" இலிருந்து மீள்விக்கப்பட்டது