பக்கம்:கனிச்சாறு 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

என்சொல்வோம்! எவ்வா றெடுத்திங் கெழுதிடுவோம்?
புன்மைமிகப் புன்மை! புகலறியாப் புன்மையே!
இற்றை நடவடிக்கை என்னும் கடைத்தெருவை
முற்றும் அறிந்து முடிச்சவிழ்த்து வாழ்பவனே,
முன்னேற்றம் என்ற முழுப்பொய்யை முன்னவிழ்ப்பான்!
இன்ன வழியறியார் எம்போல்வார் துன்புறுவார்! 100

போனதெல்லாம் போகத் தமிழர் புறம்பழிக்க
ஆன மொழித்துறையில் இற்றை அழல்சேர்த்தார்!
வெந்தயத்தை ஆட்டி விளக்கெண்ணெய் சேர்த்ததுபோல்
இந்தியமாம், பாரதமாம் - என்றார் பொறுத்திருந்தோம்!
செந்தீயால் புண்ணாக்கி வாள் கொண்டு சீண்டுதல் போல்
இந்தியத்தால் சுட்டபுண்ணை‘இந்தி’யினால் சீண்டிவிட்டார்!
நீங்கள் அறிந்திருப்பீர்; இந்த நிலவுலகில்
தாங்கற் கரிதான தொல்லை பலவரினும்
தாய்மொழியை மாளவிட்டுத் தாம்வாழ்ந்த மக்களில்லை!
வாய்மொழிபோய் ஏட்டில் வரையும் வழக்கம்போய்ச் 110
சாக்காடு போன சமற்கிருதத் தைக்கூட
நோக்காடு நீக்கிக் கொணர்ந்ததிறன் நோக்கிடுவீர்!

இஃதிப் படியிருக்க ‘இந்திபடி' என்கின்றார்!
எஃதெப் படியெனினும் இந்தி படிப்பதுதான்
முன்னேற்றப் படியின் முதல்படியாம்! சான்றவரீர்!
நன்னர் உயர்பண்பால் ஓங்குதமிழ் நங்கைமீர்!
பாலெடுத்தே ஊட்டிப் பருகுங்கால் செந்தமிழ்செய்
நூலெடுத்துக் கற்பித்த அன்னை நெடுங்குலத்தீர்!
மாவெடுத்த வண்டுவிழி கொண்டு தமிழ்மணக்கும்
பாவெடுத்த முத்தமிழைப் பாகாய்ச் செவிபிழியும், 120
செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியரே!
இந்திபடி என்கின்றார்! இந்தியத்தை ஆளவந்தார்!
முன்னர் அரசடிமை! இக்கால் மொழியடிமை!
பின்னர் வழியடிமை! என்றும்நாம் பேரடிமை!

எந்தமிழில் இல்லாத - ஆங்கிலத்தால் ஏலாத
எந்தவொரு சொல்லைப், பொருளை இவ் ‘விந்தி'யென்னும்
புன்மைக் கலவை மொழிபுகலும் யாமறியோம்!
வன்மை உரநெஞ்சும் செந்நாவும் கொண்டுரைப்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/80&oldid=1424733" இலிருந்து மீள்விக்கப்பட்டது