பக்கம்:கனிச்சாறு 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


68  தமிழ்நாடு தமிழர்க்கே!


தமிழர்க்குத் திராவிடம் என்பதோ அயன்மை!
தமிழருக்(கு) இந்தியம் என்றுமே எதிர்மை!
தமிழர்க்குத் தமிழமே பொருந்திடும் இயன்மை!
'தமிழ்த்தே சியமே' என்றும்பே ருண்மை!

'திராவிட உணர்வு' ஒரு மாயைஎன் பதற்கும்,
'தேசிய இந்தியம்' பொய்என் பதற்கும்,
கரவட மாகவே காவிரி நீரைக்
கருநா டகம்தர மறுப்பதே சான்றாம்!

கண்ணகி கோயிலில் வழிபடத் தமிழர்கள்
கால்வைத் திடவும் இசையாமல், கேரளம்
திண்ண மாகவே மறுப்பதும் இந்தியத்
தேசியம் என்பதைப் பொய்யென்று காட்டும்!

ஒற்றுமை ஒருமை என்பன வெல்லாம்
உருப்படாக் கருத்துகள் என்பதைப் பார்ப்பனன்
வெற்றுடல் பூணூலும் விளக்க வில்லையா,
வேறு வேறு இனம்நாம் என்பதை?

ஆகையால் இந்தியத் தேசியம் என்பதோ
'அடிமுட் டாள்தனம், அடிமை' என் றுணர்க!
சாகையில் எழுந்தோ உரிமை மீட்பது?
சாகாத் தமிழர்கள் விடுதலைக் கெழுகவே!

‘பிராமணன்' என்றொரு பெயருள்ள வரைக்கும்
பீடிலா இந்தியே ஆள்கின்ற வரைக்கும்
இராதிங்கு ஒற்றுமை, ஒருமைப் பாடெல்லாம்!
எனவே முழக்குக 'தமிழ்நாடு தமிழர்க்கே'!

-1991
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/97&oldid=1424590" இலிருந்து மீள்விக்கப்பட்டது