பக்கம்:கனிச்சாறு 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 கனிச்சாறு – நான்காம் தொகுதி


90

இருள் உலகம் !


பொறியிலார் புல்லுரைக் கென்செவி யிளைத்தேன்;
பொய்யர்முன் மெய்யுரைத் திழிந்தேன்;
குறியிலார்க் கொருவழி கூறிநாத் தடிந்தேன்;
கொடியர்முன் பணிந்துளம் நொடிந்தேன்;
நெறியிலார் அழிவதை எண்ணிநெஞ் சொடிந்தேன்;
நீர்மையர் வறுமைகண் டழுதேன்!
அறிவிலார் மேன்மேல் உயர்வதை அறிந்தேன்;
அழலென உளங்கொதித் தேனே! 1

உயர்விலார் தொடர்பை உண்டுளங் கசந்தேன்!
உழைப்பவர் துயர்க்குயிர் துடித்தேன்.
மயர்விலார் சிறப்பற மடிவதைக் கண்டேன்!
மாண்பிலார் பிழைக்கநெஞ் செரிந்தேன்!
அயர்விலார் இழிநிலை அடைவதை நினைந்தேன்!
அன்பிலார் இன்மொழி இகழ்ந்தேன்.
வெயர்விலார் நிழல்படுத் துறங்கநெஞ் சழன்றேன்!
வெறுவெளி துயில்வர்கண் டேனே! 2

பெட்பிலா மகளிரைப் பார்த்துளம் வெயர்த்தேன்!
பெண்டிர்தம் துயர்க்குளம் நைந்தேன்.
நட்பிலா நெஞ்சினர் நட்பினுக் கொடிந்தேன்!
நண்பருக் கலைந்துகால் கடுத்தேன்!
உட்புகா நெஞ்சினர் உறவுகண் டுமிழ்ந்தேன்!
ஊர்விழுங் குவர்க்குளம் உடைந்தேன்!
கட்புகா தீவினைக் கயவருக் கொளிந்தேன்!
காதலில் இழிவுகண் டேனே! 3

பொருட்பெற வாயிரம் பொய்ப்பரைக் கண்டேன்!
பொருள்மக ளிர்க்குளம் புகைந்தேன்!
இருட்புகு கோயிலின் இழிசெயற் குலைந்தேன்;
ஏதுமி லார்க்குநெஞ் சவிழ்ந்தேன்!
அருட்புகு நெஞ்சரென் றார்ப்பரை வியந்தேன்;
அழுக்கறு வார்க்குடல் பொடிந்தேன்.
மருட்புகு கல்வியர் மயல்சீர்க் குயிர்த்தேன்.

மானமி லார்க்கஞ் சினனே!
4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/171&oldid=1444206" இலிருந்து மீள்விக்கப்பட்டது