பக்கம்:கனிச்சாறு 4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 கனிச்சாறு – நான்காம் தொகுதி


மாருக்குத் துணியின்றி வாடிடும் பெண்டிர்!
மானத்தைக் காவாத வெறுமேனித் தோல்கள்! -
பேருக்கு உழைப்பதாய்ப் பேசியே தங்கள்
பிழைப்புக்கு வழிதேடும் பெரும்பெருந் தலைகள்!
அறுவடை செய்கிறார்கள் - இங்கே
அறுவடை செய்கிறார்கள்!

ஊருக்கே இராப்பகல் உழைப்பதாய்ச் சொல்லி
உண்மைக்குப் பூட்டிட்டே உயர்மாடி கட்டித்
தூருக்குத் தோண்டியாய் உதவுவோம் என்றே
தொண்டைக்கு மருந்திட்டு மாநாடு கூட்டி,
அறுவடை செய்கிறார்கள் - இங்கே
அறுவடை செய்கிறார்கள்!

கந்தைக்கு மாற்றில்லை! கடுக்கின்ற வயிறு!
காற்றுக்குத் தடையில்லை; கருஞ்சுவர்க் குடிசை!
மந்தைக்கு நிகரான மக்கட்செல் வங்கள்!
மற்று, அவர் பெயர்சொல்லிக் கொழுக்கின்ற நாய்கள்,
அறுவடை செய்கிறார்கள்! - இங்கே
அறுவடை செய்கிறார்கள்!

கட்சிகள் தலைவர்கள் பெயர்சொல்லிச் சொல்லிக்
கண்ணீரும் இருசொட்டு வழிவதாய்த் துடைத்து,
மெச்சிடும் திட்டங்கள் பலதீட்டி னாலும்
மீளாத ஏழ்மைக்கு மெப்பாகப் பேசி,
அறுவடை செய்கிறார்கள் - இங்கே
அறுவடை செய்கிறார்கள்!

உழைப்பாளர் தொழிலாளர்க் குழைக்கின்றோம் என்றே
ஒருகோடித் தலைவர்கள் கத்தினார் நன்றே!
பிழைப்பவர் அவர்களா, இவர்களா? - கண்டோம்!
பீற்றலும் கந்தலும் அற்றதா? பேச்சில்;
அறுவடை செய்கிறார்கள்! - இங்கே
அறுவடை செய்கிறார்கள்!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/173&oldid=1444429" இலிருந்து மீள்விக்கப்பட்டது