பக்கம்:கனிச்சாறு 4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  221


161

கொடி ஏற்றுவோம் ! நிலை மாற்றுவோம் !


உலகத் தமிழின முன்னேற்றம் என
உரைக்கும் கொடி,இது! - ஏற்றுவோம்! -நம்
ஒருமை உணர்வினைப் போற்றுவோம்!
வினை ஆற்றுவோம்! நிலை மாற்றுவோம்!


விலகியே இருந்தோம், வேறுபட்டுத் தயங்கி!
வீழ்ச்சிகள் அடைந்தோம் கூறுபட்டுத் தியங்கி!
மலைவுகள் கொண்டோம் மாறுபட்டு மயங்கி!
மற்றுய்வோம் இனிமேல் ஒன்றுபட்டே இயங்கி! (உலகத்)
          
ஆளுக்கோர் கொள்கை! ஆயிரம் போக்குகள்!
அடடா,ஓ! நமக்குள் எத்தனைத் தாக்குகள்!
வாளுக்குக் கூர்மையாய் வாய்ந்த, நம் நாக்குகள்!
வாருங்கள், இனியில்லை வழிமாறும் போக்குகள்! (உலகத்)

முயற்சிக்கும் புரட்சிக்கும் முழுநிறச் சிவப்பு!
முடிவினில் சமமெனும் உள்வட்டம் வெளுப்பு!
அயர்ச்சிக்கும் மயற்சிக்கும் இனியில்லை, வேலை!
அனைத்துலகத் தமிழினமும் ஒன்றாம்,இந் நாளை! (உலகத்)

அரசியல் மலர்ச்சிதான் அனைவரின் நோக்கம்!
ஆனாலும் தமிழர்க்குள் ஏனிந்த தாக்கம்?
உரசிடும் கரவுகள் களவுகள் ஓக்கம்!
உருப்பட வேண்டாமா? ஓரின ஆக்கம்? (உலகத்)
                       
கருத்துகள் விளரலாம், கிளைகளைப் போல!
காணுவோம் ஒற்றுமை அடிமரம் போல!
பெருத்தஓர் வீழ்ச்சி, பிளவுக ளாலே!
பிறப்பிலே ஓரினம் தமிழர்,இந் நாளே! (உலகத்)

சாதிப் பிளவுகள் இனத்தையே சாய்த்தன!
சாய்க்கடை மதங்களும் போட்டியிட் டேய்த்தன!
மோதிப் பார்ப்பனப் பூசல்கள் மாய்ந்தன!
முழுமையாய் இழக்குமுன் மாற்றங்கள் வாய்த்தன! (உலகத்)

வாருங்கள், தமிழரே! ஒன்றென ஆர்ப்போம்!
வழிவழி யாய்நமை அழித்தவை தூர்ப்போம்!
சேருங்கள் ஓரணி! எண்ணங்கள் வார்ப்போம்!
சிற்சிறி தேனுமிங் குள்ளொளி சேர்ப்போம்! (உலகத்)

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/256&oldid=1444644" இலிருந்து மீள்விக்கப்பட்டது