பக்கம்:கனிச்சாறு 4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 கனிச்சாறு – நான்காம் தொகுதி


உணர்வைத் தாழ்த்தி உள்ளத்தைப் புதைத்தே
உடலுறுப் புகளைப் படிப்படி யாகக்
கெடலுறச் செய்யும் கீழ்மை,என் னென்போம்?

தேனொலி செய்ய வேண்டிய, வீட்டின் 20
வானொலிப் பெட்டியின் வாயைத் திறந்தால்
கழுதைக் கனைப்பிலும் காக்கைக் குரலிலும்
இழுஇழு வென்றே குரலினை இழுக்கும்
பச்சைச் சொற்களில் வெள்ளை யான
கொச்சைப் பாடல்கள்! கோமாளிக் கூத்துகள்!
பள்ளியில் மாணவர் பயில்கின்ற கல்விக்குக்
கொள்ளிவைப் பதுபோல் கும்மாள வாழ்க்கை!

படித்த மடயர் பாழ்செய்யும் உலகம்!
வடித்த கயவரே வலம்வரும் உலகம்!
வீணர் நிறைந்த விளம்பர உலகம்! 30
நாண மற்றவர் நடிக்கின்ற உலகம்!

கலையெனும் பெயரால் காமத்தைப் பாய்ச்சும்
புலையர் புகுந்த புழுக்கறை உலகம்!
தூக்கில் இடத்தகும் துடுக்கரும் கொடியரும்
பாக்கள் இயற்றிப் பாழ்செயும் உலகம்!
கழுவேற்றத் தக்க களியரும் காமரும்
வழுவுறக் கதைகள் வடிக்கும் உலகம்!
ஒழுங்கிலாக் கயவர் ஒழுங்கைப் பயிற்றும்
மழுங்கல் உலகம்! மானமில் உலகம்!
கொள்கை யில்லாக் கூனர்கள் எல்லாம் 40
ஏழைகள் வயிற்றுத் தீனியைத் திருடும்
கோழையர் கொடிகட்டி வாழ்கின்ற உலகம்!
இவ்வுல கத்துள் இறங்கினாய் தம்பி!
ஒவ்வாத உலகில் உன்துணை உள்ளமே!
எஞ்சிய வாழ்க்கை இனிதாய் நடக்க,உன்
நெஞ்சை ஒருநொடி நிறுத்திக் கேள் நீ!
ஆக்கம் வேண்டுமா? அறிவு வேண்டுமா?
ஊக்கங் கொள், அஃது உணர்த்தும் வழியிலே!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/69&oldid=1440505" இலிருந்து மீள்விக்கப்பட்டது