பக்கம்:கனிச்சாறு 6.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


53

வீரனின் காதல்!


‘அன்று பார்த்த விழிகளுக் குள்ளேயே
அடைபட் டிருந்(து), என் உயிர், உளம் ஆள்கிறீர்!
என்று பார்ப்ப(து) இனி’, என, எனக்கு, நீ
எழுதியே யிருக்கின் றாய்,இளம் மங்கையே!
நின்று பார்த்த பெண்களுக் குள்ளேயே
நீதான் முழுதெனைக் கவர்ந்தவள் என்னினும்
வென்று முடித்துத் ‘தமிழ்நிலம்’ மீட்டபின்
வெற்றி முத்தத்தை வாங்கிட வருவனே!

‘பார்த்துச் சென்றிபின் நெஞ்சமும் உயிரும்
பறந்து, உம் பின்னேயே வந்ததைப் பார்த்தீரா?
வேர்த்துக் கிடக்கிறேன்; என்று வரு வீர்’, என
வினாவி இருக்கிறாய், என்னுயிர்த் தங்கமே!
ஈர்த்துக் கொண்டனை நீயும் என் உளத்தையும்!
இங்கு நான் மட்டுமே இருக்கின் றேன்,அடி!
ஆர்த்துக் கொண்டுளேன்! மொழி,இனம், நாட்டினை
அடைந்தபின் வருகிறேன்; அதுவரை பொறுத்திரு!

‘செத்துக் கொண்டுளேன்; பிணமாகிப் போகு முன்
சிரித்த, உம் முகத்தினைக் காணவே துடிக்கிறேன்;
ஒத்துக் கொண்டு,நீர் உடனே வருகுவீர்!
உயிரைக் காத்திடு வீர்’,என எழுதினாய்!
முத்தமிழ், இனம், நா(டு) உரிமை மூன்றையும்
முழுவதும் மீட்டிடப் போராடி வருகிறேன்!
மொத்தப் பணியும் முடிந்தால் மீளுவேன்;
முடிய விலையெனில் நீ,எனைத் தொடர்ந்து வா!

-1994
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/102&oldid=1445198" இலிருந்து மீள்விக்கப்பட்டது