உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


57

பூவும் புழுதியும்!


பூங்குயில், வண்ணப் புதுமலர், தும்பி,
பொழில், மலை, கூன்பிறை பரிதி,
ஓங்குயர் குன்றத் தொழுகுவெள் ளருவி,
ஓயா தாடலைக் கடலென்
றீங்கிவை பற்றி எழுதவா பாடல்
என்றனன்; என்மனை யாட்டி,
தாங்கிய வறுமைத் தணல்நீக் குதற்கே
தமிழ்மழை பொழிகவென் றாளே!

தாதிவாய்த் தூதும், தத்தைவாய்த் தூதும்,
தண்சுனை எகினத்தின் தூதும்,
ஓதிவாய் வருந்தும் ஒண்டொடி நெஞ்சில்
ஓங்குயர் வளர்ந்தநற் காதல்,
மோதுசெம் பாடல் மொழியவா என்றேன்;
மொய்விழி நகைத்தெனை நோக்கிச்
சாதிவாய்ப் பட்டுயிர் உடல்காய் வார்க்குச்
சந்தனத் தமிழ்தரு கென்றாள்!

வீழ்தெரு நகரம், விண்டொடு மனைகள்,
வியப்பினை யூட்டுநற் செயல்கள்,
ஏழ்வகைப் பண்ணும் எழுப்புநற் பாடல்,
இமிதுயர் சேராச் செல்வர்,
வாழ்வகைப் பாடல் வடிக்கவா என்றேன்
வாய்மேல் விரல்வைத் தென்னை,
பாழ்குடில், பழம்பாய், வெம்பசி, இவற்றைப்
பாருங்கள் கண்திறந் தென்றாள்!

கோவைச் செவ் வாய்கள், கொல்வேற் கண்கள்
குறுநகை, பற்பரல் என்ன,
பாவைக் கிருப்பன யாவுந் தேன்தமிழில்
பாடவா என்றதற் கன்னாள்,
நாவை வளைத்தலில் நல்லுடல் வளைத்தல்
நற்செயல் ஆகுமச் செயலால்,
தேவைகள் கிடைக்கும், தொல்லுல குய்யும்,
தாழ்வுயர் அகலுமென் றாளே!

-1951
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/110&oldid=1445209" இலிருந்து மீள்விக்கப்பட்டது