உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  87


59

காற்றே வாழ்த்துகின்றேன்!


காற்றே! யான் நின்னுடலைக் காணுகிலேன்; ஆனாலும்
கவினுடலைத் தோய்க்கின் றாய் நீ!
ஊற்றே! நல் லின்பத்தின் உறைவிடமே! நீ எங்கே
உறைகின்றாய்! உறங்கு கின்றாய்?
போற்றார் யார் உன்னை? நற்
பொதுவுடைமை யொருபொருளே!
புறவுடலின் உள்ளுயிரே! உன்
ஆற்றலுக் கிணையுண்டோ? உலகு புரக் கின்றாய் உன்
அறத்தினுக் கிணையில்லை காண்!

மென்மையினுக் கொருபொருளாய்த்
தென்றலெனும் பெயர்பெற்று
மேலேறி வலுத்து நின்று,
வன்மையினுக் கொருபொருளாய், வளியாகிப் புயலாகி
வளருமுன் திறம் வியந்தேன்!
நன்மையினுக் காகுநீ நச்சாகி மக்கள் தமை
நலிவேற்றுக் குலைவு மேற்றே,
இன்மையினுக் குட்படுத்தி, இடும்பேற்க மகிழ்கின்றாய்;
இது முறைமை யாகாது காண்!

சேர்ந்துள்ள பணத்தேக்கம் சிதைத்துப்பல் லுயிர்கட்கும்
சேர்க்குநற் றிருத்தம் போல,
ஆர்ந்துள்ள முகிற்கூட்டம் அலைத்துப்பல் லிடங்கட்கும்
அளிப்பாய் நீ! வாழ்த்து கின்றேன்.
கூர்ந்துண்மை உணர்வார்க்குக்
காற்றே, நீ யுணர்த்துகின்ற
கருத்தினுக் களவு முண்டோ?
தேர்ந்தநூல் அறிவார்ப் போல்
உடல்கரந்து பயன்காட்டும்,
திறங்கண்டு வாழ்த்து கின்றேன்?

-1954
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/113&oldid=1445367" இலிருந்து மீள்விக்கப்பட்டது