உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  93


நீரை மடக்கியொரு பாயாய்ச் சுருட்டுகின்ற
நீலக் கடலின் அலையின்,
நடுவிற் புகுந்து சுழன் றாடி மகிழ்ந்துபல
நாட்டியங் காட்டி மகிழ்ந்தும்,
பாரை ஒளிக்கடலாய்ப் பண்ணி யுருவாக்கும்
பரிதியின் சூட்டிற் காய்ந்தும்,
பனிமைக் குளிர்கடலி னடியில் மூழ்கிமுத்துப்
பரலினைக் கண்டு மகிழ்ந்தும்,
ஏரை வளைத்துடலை எருதாக்கி உயிர்புரக்கும்,
ஏழையோ டுவந்து பேசி,
இன்னாத மக்களின் நெஞ்சிற் குடியேறி
இகழ்ச்சிபல கூறி இழித்தும்,
ஊரைத் தமதாக்கி உழைப்பைப் பிறர்க்காக்கும்
உலுத்தரை இடித்தி டித்தும்,
ஓயாம லென்னுளம் என்றென்றும் ஆட்டுவிக்கும்
உயர்கூத்தை என்ன சொல்வேன்?

தூங்குஞ் சிறுகுஞ்சைத் தாவிப் பறந்துவந்து
துளிவாயில் உணவை ஊட்டித்
தொலைவிற் காத்திருக்கும் சிட்டோ டுடலொட்டித்
துய்க்குநல் லின்பங் கண்டும்,
பூங்கோ துணவுண்டு, பூந்தமிழின் பாட்டிசைத்துப்
பழகுகருங் குயிலி னோடு,
பழகிப் பெருமையல் கொண்டபின், மயிலுக்குப்
பாடியதன் ஆடல் கண்டும்,
ஏங்கிக் கணவரைநின் றெதிர்நோக்கு மங்கையர்க்
கினியசொற் கூறித் தேற்ற,
எடுத்துக் கொடுத்திட்ட இன்கனிகள் பரிசேற்றே
என்வரவு காத்தி ருக்கும்,
தூங்கா மனையொட்டி உளமகிழ அருகமர்ந்து,
தொலைசென்ற பாடல் பாடித்,
தொல்லையும், ஏழ்மையும் மறக்கயெமை ஆட்டுவிக்கும்
தனிக்கூத்தை என்ன சொல்வேன்?

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/119&oldid=1445377" இலிருந்து மீள்விக்கப்பட்டது