பக்கம்:கனிச்சாறு 6.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  105


70

உலகத்தின் கடைசிக் கொள்கை !


மக்களினம் இவ்வுலகிற் பிறந்தகாலை
மானமற்று, மொழியற்றே, உள்ளம்அற்றுத்
திக்காலுக் கோரிருவ ராகவாழ்ந்தார்!
தெளிந்தவோ ரெண்ணமிலா மக்கள்! அன்போ
அக்காலை யிருந்ததில்லை! அறிவும் இல்லை!
ஆனாலும் ஆண்டுபல செல்லச் செல்ல
தக்காத நிலைநீங்கி மக்கள் கூட்டம்
தக்கவொரு நிலையடைந்த வகையைக் காண்போம்! 1

தண்ணீரின் பயன்கண்டார்; தீயைக் கண்டார்!
தன்னுணர்வு வந்ததங்கு! வாழு தற்கு
மண்ணினது பெரும்பயனைக் கண்டார்; வாழ்ந்த
மக்கட்குள் ஒருதலைவன் முளைத்தான்; நல்ல
எண்ணங்கள் வளர்ந்தனபின்! மொழியைக் கண்டார்!
ஏடுகளைத் தாம்வரைந்தார்! அறிவைக் கண்டார்!
பண்ணிவந்த தொழில் வகையால் மக்க ளுக்குள்
பல்பிரிவு பெருகிற்று! குமுகம் கண்டார்! 2

கூட்டங்கள் குழுவாக, குழுக்கள் சேர்ந்து
கோவென்றும் இறையென்றும் அரசன்என்றும்
கூட்டத்துள் ஓராளை யாக்கி வைத்தார்
கோவாழும் இல்தன்னைக் ‘கோயில்’ என்றார்.
நாட்டினது நலமேதன் நலமா யென்னும்
நல்லெண்ணம் குறைந்துவர, நாட்டு மக்கள்
வாட்டமுடன் வாழலுற்றார்; சில்லோர் சேர்ந்து
வகைசெய்ய முன்னின்று அறத்தைச் சொன்னார்! 3

அறஞ்சொல்லி வந்தவர்கள் குழுவில் சில்லோர்
அரசைக்கைப் பற்றிப்பல் இன்னல் செய்து,
திறஞ்சொல்லி மக்கட்குள் ளுயர்வு தாழ்வும்
தீராத சாதிகளும் ஆக்கி வைத்துப்
புறஞ்சொல்லிப் பொய்சொல்லி, மக்கள் வாழ்வில்
புரைதன்னை யுண்டாக்கி விட்டார்! வாழும்
அறஞ்சொல்லும் நூலிலெல்லாம் சமயச் சார்பை
ஆக்கிவைத்தார்; கடவுளையுண் டாக்கி வைத்தார். 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/131&oldid=1445396" இலிருந்து மீள்விக்கப்பட்டது