உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  109


73

செம்பொருள் விளக்கம் !


அறம் எனச் சொல்லுவ தென்ன வென்றால் - நல்ல
அருள் எனப் படுவதின் வேர்! - பெரும்
மறம் எனச் சொல்லுவ தென்ன வென்றால் - பிறர்
மன்னிக்கப் படுவதின் பேர்!

திறம் எனக் கூறுவ தென்ன வென்றால் - நெறி
தேர்ந்து தெளிந்த செயல்! - நல்
உரம் எனப் புகலுவ தென்ன வென்றால் - மன
உறுதி குன்றாமற் சொலல்!

அன்பெனப் பேசுவ தென்ன வென்றால் - இரண்
டாக்கமும் ஒன்றெனும் சொல்! - நல்ல
தென் பெனச் செப்புவ தென்ன வென்றால் - பிறர்
தீமை நொறுக்கிடும், கல்!

பணி வெனப் பகருதல் என்ன வென்றால் - நல்ல
பண்பெனும் மாண்பின் தலை! - உளத்
துணி வெனத் திகழுத லென்ன வென்றால் - பெரும்
நன்மைக்குக் கூறும் விலை!

பெண்ணெனக் கழறுவ தென்ன வென்றால் - அறப்
பண்பெனப் படுதற் கிடம்! - பெருந்
திண் ணெனத் திகழுவ தென்ன வென்றால் - அது
துலங்குதற் கேற்ற விடம்!

ஆண் என அறைந்திடப் படுவதெல்லாம் - பெரும்
ஆக்கத்திற் கிட்ட பெயர் - அதன்
பூண் எனப் போற்றுதல் எஃதை என்றால் - அன்பு
பூணும் தாய்மைக் குலத்தை!

புகழ் எனப் போற்றுத லென்ன வென்றால் - அறம்
பெய்த நறுஞ் செயலை! - பெரும்
இகழ் எனத் தூற்றுவ தெஃதை என்றால் - தீது
இட்ட கொடுங் குலத்தை!

-1960 (?)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/135&oldid=1445402" இலிருந்து மீள்விக்கப்பட்டது