உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௯

கனிச்சாறு ஆறாம் தொகுதி


9. ஒரு கிளியின் அழகு நிலைகள் அவனுடைய காதலியின் அழகுக்கு எந்த நிலையிலும் ஒப்புவதில்லை என்னுங் கருத்தை இனிமையாகக் கூறுவது இப்பாட்டு.

10. தான் காதலித்த பாணன் ஒருவனின் அடையாளங்களைத் தோழியிடம் சொல்லி அவளைத் தேடி வரச் சொல்கிறாள் தலைவி. பாட்டு இசையோடு துள்ளுகிறது.

11. இயற்கைப் பொருள்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைவதை வரவேற்கின்றன. ஆனால் இவளிடத்தில் மட்டும் ஏனிந்த வேறுபாடு? சேரத்தழுவும் தன் கைகளை விலக்கும் வகை என்ன? என்று வியக்கின்றான் தலைவன்.

12. குயிலும் தமிழும் தாமரையுங் கொடியும் எனக்கு உவப்பூட்டும்; உன் அழகு உருவம் எனக்கு எதற்கு? என்று பழிப்பதுபோல் புகழ்கின்றான் தலைவன்.

13. மகப்பேற்றுக்காகச் சென்றனள் அவன் மனைவி! ஆண்டு அவள் இறந்தாள் மகவொடு! ஈண்டு இவன் துன்பம் இது!

14. தமிழை மணந்த பாவேந்தர் பாரதிதாசனிடம் ஒரு பெண் காதல் கொண்டாள். அத் தமிழ் என்னும் பெண்ணைத் தவிர வேறொருத்தியைத் திரும்பிப்பாரேன் என்று மறுத்தான் அப் புலவன். ‘வாழ்க’ எனக் கூறி வழிநடந்தாள் அவள். பாவேந்தர் பாரதிதாசன் முன்னிலையில் ‘பாரதிதாசன் எண்சுவை’ என்னும் தலைப்பில் நடந்த பாட்டரங்கத்தில் ‘இளிவரல்’ பற்றிப் பாடியது.

15. புதுமையான பாடல் இது. ஈக்கள் இரண்டின் இன்பியல் நாடகத்தையும், துன்ப முடிவையும் அழகிய கற்பனையால் வெளிப்படுத்துகிறது இப்பாட்டு.

16. மீன்பிடிப்புக்கெனக் கடலுள் புகுந்த தன் காதலன் வராமையால் வாடிப் போய்த் தோழியிடம் வருந்தித் தன் பிரிவாற்றாமையைக் கூறுகிறாள் தலைவி.

17. அழுதுவடித்தத் தலைவியிடம் தலைவனை அழைத்த வந்தபின்னும் மீண்டும் விட்டு விட்டுச் சென்றுவிடுவாரே' என அழுகிறாள் தலைவி.

18. 1952-ஆம் ஆண்டில் ‘குழந்தை ஒரு தொல்லை’ என்று ‘முல்லை’யில் கண்ணதாசன் எழுதியிருந்த பாட்டிற்கு மறுப்புப் பாட்டு இது.

19. காதல் நினைவுகள் வேறு; காதலியின் ஈடுபாடு வேறு; காதல் பாட்டுணர்வை வளர்க்கும். காதலியின் ஈடுபாடு பாட்டுணர்வைத் தேய்க்கும். ‘எட்டியிரு; கிட்டேவராதே; என்னை அணைக்காதே; என்பாடல் வாழ வேண்டும்’ என்று காதலிக்குத் தடையிட்டுப் பீறிவரும் பாடல்களைப் படைக்கிறான் பாவலன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/17&oldid=1445060" இலிருந்து மீள்விக்கப்பட்டது