உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨

கனிச்சாறு ஆறாம் தொகுதி


79. தொடக்கக்காலத்துத் தென்மொழித் தொடர்பாளர்களின் துயர் அழுத்தங்களால் கிடைத்த நல்ல பாடங்களுள் இதுவுமொன்று. ஆசிரியர் அறிவு திறந்து தம் நெஞ்சத்துடன் உரையாடுவதும், நெஞ்சம் அவர்க்கு விடையிறுப்பதும் எத்துணை வியத்தகு உணர்வு வெளிப்பாடுகள்! ஆழ்ந்த கருத்துகள் ஊடாடுகின்றன. கரிக்கொட்டைகள் உணர்வுச் சூட்டுள் வயிரமணிகளாக மாறுவதுபோல் கற்பனை மூட்டங்கள் வாழ்வின் துன்பச் சூட்டால் பாடல்மணிகளாகத் தெறிக்கின்றன. அழுந்திச் சுவைத்துப் பாருங்கள்.

80. பொருள்களில், மக்கள் நிலைகளில், வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை மெய்யறிவோடு பொருத்திக் கூறுகிறது.

81. உலகின் நிலையாமை நிலைகளும், அவ்வுலகில் மாந்தன் அவனையறியாமலேயே வந்து பிறப்பதும் வாழ்வைத் துறப்பதும் நேர்கின்றன. இவ்விடைநாள்களையே அவன் வாழ்க்கை என்கிறான். இங்கு வாழும்வரை அவன் நல்லவற்றையே தேர்ந்து நல்லதொரு சிறப்பு வாழ்க்கையே வாழவேண்டுமென்னும் கருத்தை எடுத்து வலியுறுத்துவது இப்பாடல். மெய்ப்பொருளுணர்வு முகிழ்க்கப் பாடியது.

82. துன்பம் என்பதும், இன்பம் என்பதும் வெறும் மான உணர்வுகளா? எவ்வளவு விளக்கமாக உரைக்கிறது இப்பாடல். எத்தனை எத்தனை வேறுபாடுகள்! எத்தனை எத்தனை உள உணர்வுகள். பாட்டில் தோய்ந்து பாருங்கள்.

83. இவ்வுலக வாழ்க்கையும் விளையாட்டின் தன்மையில் எவ்வாறு இயைந்திருக்கிறது எனத் 'தமிழ்ச்சிட்டு'களுக்கு எழுதிய மெய்ம்மைப் பாடல்.

84. உலகத்தின் சொல்சுருக்காய் இவ்வுடலம் இயங்கிக் கொண்டிருக்கையில் எவர் ஒருவரும் தம் கடமைத் தவறாமல் செயலாற்றிடச் சொல்லுகிறது பாடல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/23&oldid=1445070" இலிருந்து மீள்விக்கப்பட்டது