பக்கம்:கனிச்சாறு 6.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  3


1

வழிந்த தேன்!


பானையில் உள்ள பாலோ
‘பருகெ’னச் சென்று கூவிப்,
பூனையை அழைப்ப தில்லை;
பூவுந்தன் னிடையில் தங்கும்,
தேனைவந் துண்ணு தற்குத்
தும்பியை அழைப்ப தில்லை;
ஏனைய பொருளும் இவ்வா
றிருக்க நான் அழைப்ப தேனோ? 1

தாமரைப் பெண்ணோ, தங்கத்
தழல்வந்து கலவா முன்னர்,
தாமாக பெண்மை என்னும்
தீங்கனி கிளிபாற் சென்று
தாமாக ‘வா’னெப், பெண்மைத்
தன்மைவிட் டழைப்ப தில்லை;
ஆமென்றால், அவனை நான்போய்
அணைப்பதற் கழைப்ப தேனோ? 2

“யாழினில் இசையை வேண்டின்,
அருகிற்சென் றிசைத்தல் வேண்டும்;
ஆழியான் தன்னைத், திங்கள்
அணைத்திட முந்த வேண்டும்;
நாழிதோய் இன்பத் திற்கோ
நாணத்தை யகற்றல் வேண்டும்?”
தோழியிவ் வாறு கேட்டுந்
துணைவரை அழைப்ப தேனோ? 3

தென்றலைத் தோழி யாக்கித்
தெள்ளிய மகரத் தூளை,
மன்றலின் ஓலை யாக்கி,
மலர்ப்பெண்ணாள் தேனை உண்ண,
பொன்றளிர்த் தும்பி தன்னைப்
புறப்பட்டு வரச்சொல் கின்றாள்!'
என்றனள் தோழி; நானும்
எழுதியோர் மடலைத் தந்தேன்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/29&oldid=1445076" இலிருந்து மீள்விக்கப்பட்டது