உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  21


13

இறுதி நாள்!


(மகப் பேற்றுக்காகச் சென்றனள் அவன் மனைவி!
ஆண்டு அவள் இறந்தாள் மகவொடு! ஈண்டு இவன் துன்பம் இது.)



வந்து வந்து வாழ்ந்துயிர் மாய்ந்திடும்,
வானம் போர்த்த யிம் மண்மிசை தான், அவள்
சிந்தை குளிர்ந்திடும் அழகொடும், சீரொடும்,
சிறப்பெனக் கூறிடும், குணத்தொடும் பிறந்தனள்!
தந்தையும் தாயும் உளங்களித் திருக்கவே
தளர்நடை பயின்றுயர் கல்வியும் கற்றவள்,
உந்தும் மகிழ்வொடும் நாணத்தி னோடும்
ஒருநாள் வந்தென் னிருகைப் பற்றினள்! 1

பூத்த முறுவலிற் பொதிந்த கருத்தொடும்,
புகழ்தரு முயர்வெனுந் தாயின் அன்பொடும்,
காத்த ஒருத்தியைக், கருவிழி யொத்திடும்
கன்னியை, என்னுளங் கவர்ந்த கள்ளியைக்
கூர்த்த விழியொடு, காக்கையில், கூற்றெனுங்
கொடுந்துயர் கொண்டதை யாரிடங் கூறுவேன்!
ஆர்த்த இன்பம்போ யடங்கிடக் கண்களும்
அருவி யானதென் றாரிடம் புலம்புவேன்! 2

அன்றைய நாளிர வருகினில் நெருங்கியென்
அணைப்பினி லவளுடல் அடக்கி மகிழ்ந்தவள்,
‘என்றையு முங்கள் உயிரிப்பினில் உளத்தினில்
இருக்க உதவுங்கள் அத்தான்
’ என்றனள்!
பின்றை ஒவ்வொரு நாளும் அப் பேட்டினைப்
பின்னிப் பிணைந்து நற் காதல் வளர்த்ததை
இன்றை மறந்தனள்! ஏகினள்! எனைவிட்டு,
இறந்தனள்! ஐயகோ! எவரிடம் இயம்புவேன்? 3

இன்ப நாட்களுக் கிடையினில், ஏந்திழை
என்னரு கொருநாள் நெருங்கி நாணியே,
அன்புரு ஒன்(று) அடி வயிற்றில் தங்கிய
அருமைச் செய்தியைச் சொல்லி மகிழ்ந்தவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/47&oldid=1445096" இலிருந்து மீள்விக்கப்பட்டது