உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  23


14

பாரதிதாசன் காதலி!


கொழித்த செந்தமிழ்க் கோமகளின்
குறள்மணக் கும்வாய்ப் பேச்சினுக்கும்,
செழித்த சிலம்புசிந் தாமணிக்கும்,
செறிவளை, குண்டல, மேகலைக்கும்,
கழித்தான் பொழுதை அவனிடத்திற்
காதலைச் சொன்னேன்; கன்னியெனைப்
பழித்தான், இழித்தான்; தோழியவன்
பாரதி தாசனெ னும்பெயரோன்.

ஊற்றுப் பெருக்கெனப் பாவியற்றி
உலகோர்க் கீந்தான்; துன்புறுவார்க்
காற்றுப் பெருக்கென உதவியவன்;
அவன்தோள் விரும்பி “மணந்தென்னை
ஏற்றுக் கொள்வீ” ரென்றேனா,
இளையாள் என்றன் உளம் நோகத்
தூற்றிப் பழித்தான்; தோழியவன்
தோன்றல் பாரதி தாசனென்பான்

செந்தமிழ்க் கன்னியெ னுமொருத்தி
சேல்விழிக் கும்அவள் பால்மொழிக்கும்
தந்தவன் உளத்தை என்பார் சொல்
தவிர்த்தே தோழி அவனிடத்தில்,
சிந்தும் புன்னகை மொழிகூறிச்
‘சேயிழை யென்னைக் கொள்கெ’ன்றேன்
நொந்தழி வுறுமா றெனை யிழித்தான்;
நோய்செய் தானென் உயிர் கொய்தான்!

(வேறு)


அலை குதிக்கும் கடற்கரையில் அமைந்த திருநகரம்!
அகல்விசும்பின் மேற்புரண்டு விரிந்திருக்குந் தென்னங்
குலைகுதிக்கும் சோலைமலி தென்புதுவை நகரில்,
குளங்குதிக்கும் மீன்போலும் வாய்குதித்த தமிழில்
கலைகுதிக்கும் பாவரசன் பாரதிதா சன்மேல்
காதலெனக் கூறியவன் இசைவுதரக் கேட்டேன்;
மலைகொதித்து வெடித்ததுபோல் “மன்னுதமிழ்க்கன்னி
மணந்தவன்யான்; பிறர்விரும்பேன்;
போபோபோ”
வென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/49&oldid=1445098" இலிருந்து மீள்விக்கப்பட்டது