உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


43

வருவாளோ?


ஓவிய நலன்கள் முற்றும்
மேவிய ஒருத்தி என்றன்
ஆவியைப் பறித்தெடுத்துச் சென்றாள் துயர்
தூவிய உள்ளத்தை அன்றே கொன்றாள் - அவள்
ஏவிய விழிக் கணையில்
தாவிய என் உள்ளம் பட்டுக்
கூவிய ஓலத்தை மடுப்பாளோ? இன்ப
வாவியில் மிதக்க விடுப்பாளோ? 1

கட்டிய முல்லை அரும்பாய்க்
கொட்டிய மலர்ச் சிரிப்பை
ஒட்டிய செங் கோவை இதழ்க் குள்ளே - அடைப்
பட்டிடக் கிடத்தி வைத்த கிள்ளை,கை
தொட்டிடும் பொழுதில் எல்லாம்
எட்டிய தோர்புள்ளி மானின்
குட்டியாய்ப் பொன் மேனி தருவாளோ? - தானும்
மட்டிலாத இன்பம் பெறுவாளோ? 2

குங்கும நுதற் பிறையும்
சங்கெழில் புனை கழுத்தும்
தங்கிய பொன் வண்டின் ஒளிமின்னும் - நுரை
நுங்கிய என் ஆவல், உயிர் தின்னும் - முழுத்
திங்களின் குளிர் முகத்தில்
மங்கிய காதற் குறிப்பும்
எங்கெங்கும் எனை எடுத்துச் செல்லும் - காதல்
பொங்கிடக் கோடிக் கதைகள் சொல்லும். 3

தேடிய என் கண்கள் பொங்க
ஓடிவந்(து)இளைத்த என்னை
நாடியிழுத் துள்ளம் அணைப் பாளோ? - உயிர்
கூடியுடல் முற்றும் நனைப்பாளோ? - நான்
பாடிய பாட் டொன்றுக் காடி
வாடிய இடை வருந்தி
ஊடிய விழி மயங்கு வாளோ? - உடன்
கூடிட எனை முயங்கு வாளோ? 4

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/84&oldid=1445163" இலிருந்து மீள்விக்கப்பட்டது