உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  69

அன்னையே அமிழ்திடம் செல்வார்; அன்றெனின்
என்னை அனுப்பி அமிழ்தை இழுப்பார்!
அவரும் அவளும் அரட்டை அடிக்கையில்
எவரும் இடையில் நுழைதல் இயலாது.
அமிழ்தம் வந்தால் அனைத்து வீடும்
கமழும் மல்லிகை! கால்சிலம் பொலிதான்!
சிற்சில நேரம் அமிழ்தம் சிரிக்கையில்
பற்களின் அழகைப் பார்த்து வியப்பேன்! 70
சிரித்துச் சிரித்துப் பேசும் பொழுதெலாம்
சரிந்து சரிந்து வீழும் வளையல்கள்
புதிய புடவையின் முரமுரப் போசை
பதிந்து நின்றதென் பசுமைஉள் ளத்தில்!
அன்னையும் அமிழ்தமும் அடிக்கும் அரட்டையில்
என்னென்ன செய்தியோ இழைந்து தொடரும்!
தாயைப் பற்றியும் தந்தையைப் பற்றியும்
வாயே வலியாமல் பேச்சுகள் வளரும்!
கணவனைப் பற்றிய கதையும் அடிபடும்!
மணநாள் விருந்தின் மணமும் வீசும்! 80
கொண்டவன் ஊரும், குடும்பச் செய்தியும்
கண்ட காட்சியும் கமுக்க நிலைகளும்,
சென்றதும் இருப்பதும் செறியச் செறிய
ஒன்று விடாமல் ஓயாமல் உலாவரும்!
காலையில் கணவர் பள்ளி சென்று
மாலையில் வரும்வரை அரட்டையின் மணந்தான்!
அன்னையும் சலியாது அமிழ்தின்
கன்னல் பேச்சில் கழித்தாள் பொழுதையே!


6 முதல் 10-ஆம் நாள் வரை!

குடும்பப் பேச்சுகள் குறையத் தொடங்கி
அடுத்த வீட்டையும் அண்டை வீட்டையும் 90
அறிமுகப் படுத்தி அன்னை தொடங்கினார்!
குறிமுகங் கண்டு கூட்டியும் குறைத்தும்
அயலயல் வீட்டுச் செய்திகள் அனைத்தும்
கயல்விழி நோக்கக் கனியக் கனிய
அமிழ்தம் செவிக்கே அன்னை ஏற்றினார்!
தமிழின் வளமையும் தண்மையும் மென்மையும்
அனைத்துச் சுவைகளும் அன்னையின் பேச்சில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/95&oldid=1445188" இலிருந்து மீள்விக்கப்பட்டது