உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 6.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  71


20–ஆம் நாள்

அந்தநாள் வந்ததே! அமிழ்தமும் வந்தாள்!
வந்ததும் அன்னையார் வருந்தி, வராத
இடைநிலைக் கிரண்டோர் இயலாமை கூறிக்
கடைப்பொருள் நிலையும் காட்சி சென்றதும்,
பெற்றவர் மடலும், பிறிதொரு நாளில்
உற்றவ னோடவள் கொண்ட ஊடலும்
ஒன்றுவிட் டொன்றாய் உவகையும் வருத்தமும்
நின்றபல் செய்திகள் நிகழ்த்தி முடித்தே, 140
அன்னையின் மருங்கில் அணுக்க நெருங்கி,
என்னையும் ஒருகண் ஏறப் பார்த்தே,
“அம்மா, கேட்டிரா, அவன்தான் முரடன்...
சும்மா அடிக்கடி சுட்டு விடுதல்போல்
என்றெனைப் பார்க்கிறான்; இருமிக் கனைக்கிறான்;
நின்று வாயிலில் நீளத் தும்முவான்!
இச்செயல் பற்றி எடுத்துக் கூறி
எச்சரித் திடவே, என்கண வரிடம்
கூறவும் எண்ணினேன்; கூறியபின்,அவர் 150
வேறாய் நினைத்து, வினையாய் முடிந்தால்
தொல்லைப் படிப்படி தொடருமென் றெண்ணிச்
சொல்லா தொழிந்தேன்; சொல்லுவீர் அம்மா!
என்செய் வதுநான்?” எனமிக மெதுவாய்ப்
புன்செயல் தன்னைப் புறத்தே விளித்தாள்!

அன்னையார் அவளை அடக்கி, “அம் முரடனின்
முன்னை, நீ நின்றது முதற்பிழை” என்றாள்!
“நான்ஏன் நிற்கிறேன், இந்தநாய் முன்னம்?
ஆவின் சாணம் அள்ளித் தெளிக்கவே
காலையில் வருவேன்; காய்கறிக் கடைக்கு
மாலையில் செல்லுவேன்; மற்ற, ஏன் வருகிறேன்? 160
கால்செருப் புறாத கயவோன் இவனால்
காலையும் மாலையுங் கடைக் கதவினை
அடைத்துப் போட்டே அடுப்படி யினையே
துடைத்துக் கொண்டுதான் இருக்கவும் வேண்டுமோ?
என்னம்மா சொல்கிறீர், நீங்களும்?” என்றே
மின்னலும் இடியுமாய் மேலுறக் கேட்டாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/97&oldid=1445192" இலிருந்து மீள்விக்கப்பட்டது