பக்கம்:கனிச்சாறு 7.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


53

உள்ளச் சிதைவுகள்!


உள்ளத்தால் நலிந்துள்ளேன்; உடலாலும்
மெலிந்துள்ளேன்; உறவோர் போலும்
கள்ளத்தால் இயங்குகின்ற,கனிவாக
நடிக்கின்ற,கரவு நெஞ்சர்,
கொள்ளத்தான் இயலாத கொடுமைகளைச்
செய்கின்றார்! குடும்பம் என்னும்
தள்ளத்தான் முடியாத தடஞ்சுமையும்
தோள்அழுத்தத் தளர்கின் றேனே!

அறிஞர்களைப் பேணாத அழிவரசும்,
ஆள்கின்ற அமைச்சர் தாமும்
வெறிஞர்களைப் போல்,பயனில் வீணர்களைப்
போல், வெற்று வினைகள் செய்வார்!
வறிஞர்களாய் உழைப்பவர்கள் வாடிநிலை
குலைகின்றார்! வரும்பொ ருள்மேல்
குறிஞர்களாய் ஆட்சியினர் கொள்ளையிடு
வதுகண்டும் குமைகின் றேனே!

மக்களெல்லாம் வழிமாறி மாண்பிழந்தே
எதைச்செயவும் மனம்து ணிந்தார்!
தக்கபடி அன்னவரைத் தகும்வழியில்
செலுத்தவும் ஓர் தலைவ ரில்லை!
வக்கில்லை; என்போலும் வருந்துவர்க்கும்
வழியில்லை; வாய்ப்பும் இல்லை!
திக்கறியா நெடுங்கடலுள் சீறுபுயல்
சுழல்மணலாய்ச் சிதைகின் றேனே!
-1990

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/115&oldid=1446163" இலிருந்து மீள்விக்கப்பட்டது