பக்கம்:கனிச்சாறு 8.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120  கனிச்சாறு - எட்டாம் தொகுதி

செந்தமிழ்க்கே நாமிருப்போம் என்னில்அவர் கொடையே!
செந்தமிழ்க்கே வாழ்ந்தவரும் செத்தொழிவ துண்டோ?
செந்தமிழும் வாழும்வரை அவர்தமிழும் வாழும்!

1. இயற்கை

இருக்கின்ற பாவலர்கள் இருகோடி என்றால்
இயற்கைப்பா வலர்அவருள் இருபதுபேர் இருப்பர்!
கருக்குழியில் ஒளியேறி உணர்வேறித் திருவில்
கற்பனையாம் பொலிவேறிப் பாட்டுணர்வும் ஏறி,
உருக்கொண்டு தாய்மடிமேல் வீழ்ந்தபின்னே அவளின்
ஒளிமார்புக் காம்புவழித் தமிழேறிப் பாய்ந்தால்,
தெருக்கடையில் இறங்குகையில் பாட்டுவரும் தெளிவீர்!
தெம்மாங்கு செந்நாவில் எழுந்துவிளை யாடும்!

அன்னவரைத் தாம்இயற்கைப் பாவலர்கள் என்போம்!
அப்படித்தான் ‘கனகசுப்பு ரத்தினம்’ பாவேந்தன்!
இன்னவரைப் போல் இயற்கை இயற்றிவைத்த பேருள்
இவரவரின் ஆசானுக் காசான்என் றுரைப்போம்!
முன்னவரைப் பாரதியைக் குறைசொல்ல வில்லை!
மூச்சிலிவர் தமிழுயிர்த்தால் பேச்சிலவர் என்போம்!
என்னபடி பார்த்தாலும் பாரதிபாட் டுக்கே
ஏழுபடி மேலிருக்கும் பாவேந்தன் பாட்டு!

நடுநிலையில் லாமலிதை நாம்சொல்ல வில்லை!
நாமவரின் வழிவந்த நன்றியுரை இல்லை!
கெடுநிலையில் பார்ப்பனர்கள் பாவேந்தர் பாட்டைக்
கீழ்வைத்துப் பேசுகின்றார்; நாமவர்க்குச் சொல்வோம்!
தொடுநிலையில் பாட்டுணர்வில் தோய்கின்ற நிலையில்
தூய்தமிழை மனங்கொண்டு பாடுகின்ற நிலையில்
நெடுநிலையில் மலைப்புனலாய்ப் பொழிந்திருக்கும் நிலையில்
நிலைத்திருக்கும் நிலையினிலே பாவேந்தன் வெல்வான்!

தன்விளக்கம் பாடுகின்றான் பாவேந்தன் இங்கே!
தமிழ்ப்புலவன் செம்மாப்பைக் கேளுங்களிப் பாட்டில்!

‘சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்

போர்த்திறத்தால் இயற்கை புனைந்தஓர் உயிர்நான்!’

இன்விளக்கம்! இதுவாகும் ‘இயற்கைதந்த உயிர்நான்’
என்றுரைக்க வில்லையவன்; புனைந்தஉயிர் என்றான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/134&oldid=1448479" இலிருந்து மீள்விக்கப்பட்டது