பக்கம்:கனிச்சாறு 8.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


.....................................................
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையிருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!’

‘மனிதரில் நீயும்ஓர் மனிதன்; மண்ணன்று!
இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து உலகத்தை!
இதுதான் உன் வீடு’
                           “சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செயப் புறப்படு வெளியில்!’

‘கைவிரித்து வந்த கயவர் நம்மிடைப்
பொய்விரித்து நம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பாரெனில்
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!’

‘தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்’

‘தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே’

‘உயர்தமிழ் உயர்நடை உயர்தனி வீரம்

இங்கிவை தமிழரின் உடைமை’


எப்படித்தீ எழுப்புகின்ற செழுங்கூர்மைச் சொற்கள்!
ஈட்டியென - வேல்களென எதிரிகளின் நெஞ்சில்
அப்படியே போய்ப்பாய்ந்து குலைநடுங்க வைக்கும்!
அலையலையாய்த் தமிழினத்தின் வெற்றிகளைக் குவிக்கும்!
இப்படியார் எழுதியவர்? இழிவயிற்றுப் பசிக்கே
எழுதிநலந் தேடிடவே எல்லாரும் பாடி
முப்படியாய்த் தமிழ்நலத்தை தமிழினத்தைத் தீய்த்தார்!
மூண்டுவந்த எரிமலையாய்ப் பாவேந்தன் எழுந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/148&oldid=1448534" இலிருந்து மீள்விக்கப்பட்டது