பக்கம்:கனிச்சாறு 8.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


தின்பதற்கும் துய்ப்பதற்கு மே, தமிழர் திரிகின்றார்!
மன்பதைக்கு நலஞ்சேர்க்க மாந்தர் உழைக்காமல்
விலங்குகளா வந்துழைக்கும்? நாகரிக வேகத்தில்
கலங்குகின்ற மக்களிடம் காசடிக்கும் கூட்டங்கள்-
ஏமாற்றி வாழ்கின்ற எத்தர்களின் கும்பல்கள் -
தாமாற்றும் கயமைக்கெலாம் தமிழை முன் வைத்துப்

பெயரும் பணமும் பெறமுயலும் பீற்றல்கள் -
அயருகின்ற மக்களிடம் ஆர்ப்பரித்து, விளம்பரத்தால்
தேர்தலில் நின்றுவெற்றி தேடும் அரசியல்கள் -
சேர்கின்ற கூட்டத்தில் மதத்தைச் சிக்கவைத்தே
எல்லா நன் மக்களையும் இளித்தவா யர்களாக்கும்
மதவெறியர் கூத்துகள்! மாதலைவர் பெரியாரால்
புதைகுழிக்குப் போய்விட்ட சாதிகளைப் புறந்தோண்டிக்
கதைசெய்து சாதிகளைக் காசாக்கும் கொடுமைகள் -
- இவ்வாறாய்த் தமிழினத்தை இழுபறிக்கே ஆளாக்கிக்
கவ்வி யிழுத்துக் கைவேறு கால்வேறாய்ச்
செய்துவரும் காலத்தில் சிக்கியிருக் கின்றோம், நாம் !
எய்திவரும் துயருக்கோர் எல்லையில்லை, அன்பர்களே!

இந்த நிலைகளெல்லாம் எப்படித்தான் நம்மினத்தை
வந்து கவ்வினவோ? என்று கலங்குகின்றீர்!
வரலாறு தெரியாத வகையினர்தாம் இவ்வாறு
நிரல்நிறையாய் எண்ணத் தெரியாமல் நின்றழுவார்!

உண்மை தெரிந்தால் ஊமையராய் வீற்றிருக்கார்!
மண்மேல் தமிழஇனம் மண்டியிட்டு வாழ்ந்ததில்லை!
எத்திக்கும் சென்றே ஏற்றம் விளைவித்த
முத்தமிழர் வரலாறு முளைக்கும் போ தே,வீரம்
கொப்புளித்துப் பொங்கும் குலைநடுங்கும் வரலாறாம்!

தப்புத் தவறாக நாம்படிக்கும் வரலாற்றில்
இராவணற்குத் தாழ்ச்சி; இராமனுக்கோ ஏற்றம்!
இரணியனுக் கிழிவு! ஏற்றம், பிரக லாதனுக்கு
மாவலிக்கு வீழ்ச்சி! மறையோனுக் குயரெழுச்சி!

தாவி இமயமலை தலைமேல் புலிக்கொடியும்
விற்கொடியும் பொறித்த வீரவர லாறு - எங்கே?
கற்குடைந்து தூக்கிவந்த கனகவிசை யர் - எங்கே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/192&oldid=1448652" இலிருந்து மீள்விக்கப்பட்டது