பக்கம்:கனிச்சாறு 8.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


ஈவேந்திக் கொண்டிருந்தார்; இருபதாம் நூற்றண்டில்
காவேந்த ராய்வந்தார், நம்பெரியார்! அவர் வழியில்
பாவேந்தர் தலைநின்றார்! பாட்டாலே பெரும்புரட்சி
செய்திடவும் சீர்த்தெழுந்தார்; செத்திருந்த தமிழினத்தார்
உய்திபெற் றெழுந்திடவே உணர்ச்சிப் பிழம்பாகச்
செந்தமிழை வெந்தணலில் தோய்த்தெடுத்தே எந்தமிழர்
முத்தி யிழந்திருந்த மொய்ம்புகளை நினைவூட்டி,

‘நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்’
- என்று ஆர்ப்பரித்து வீறார்ந்து,

“தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்;
செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்”

“ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்;
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்”


என்று மொழிந்து எழுந்துநின்றே ஆர்ப்பரித்தார்;
ஒன்றுபட் டியங்கிடவே தமிழ்மொழியும் உண்டென்றார்;
மொழியை முன்வைத்து முழுஇனத்தை இணைத்திடுமோர்
வழியினைக் கண்டுசொன்னார்! வரம்பதுவே என்று சொன்னார்!

“மொழியென்றால் உயிரின் நரம்பு - நம்
முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு”
- என
மொழிவரம்பு கட்டியராய், மூட்டிவிட்டார் செந்தணலை!
விழிக்கூர்மை காட்டி வெளியார்க்குச் செய்தி சொன்னார்!

“செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததெனக்
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே”


என்றபடி கருங்குயிலை எச்சரிக்கை செய்யச்சென்னார்!
அன்றையவர் தொடங்கிவைத்த அழகுதமிழ் ஏட்டிற்குக்
‘குயில்’ என்று பெயர்வைத்துக் குவலயத்தில் கூவ விட்டார்!

“எரிகின்ற எங்களின் நெஞ்சுமேல் ஆணை!
இனியெங்கள் ஆட்சியிந் நாட்டிலே”
- என முழங்கி,
“இருக்கும் நிலைமாற்ற! ஒரு புரட்சிமனப் பான்மை
ஏற்படுத்தல் கடன்”
என்று எழுத்தாளர்க் கெல்லாம்
கடனுரைத்து அன்னவர்க்குக் கருத்தும் தொடுத் துரைத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/194&oldid=1448658" இலிருந்து மீள்விக்கப்பட்டது