பக்கம்:கனிச்சாறு 8.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 53


யாருந்தான் புகழ்வார்; மகிழ்வார்; யாப்பிலே!
ஆனால், பாரதி தாசற் கந்நிலா
ஈனா நின்ற எழுச்சியைப் பாருங்கள்.

‘உனைக்காணும் போதினிலே என்னுள் ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு
நினைத்தாலும் வார்த்தை கிடைத்திடுவ தில்லை;
நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

கவின்நிலவே உனைக்காணும் இன்பந் தானோ?’

முழுமை நிலாவை மேலும் காண்கிறார்;
கொழுமை அழகுக் குலாவலைப் பாருங்கள்!
சிறுவர்க் கிதனைச் செப்பிப் பாருங்கள்!
உருவம் மாறும்; உணர்வும் பெருகும்!

“முழுமை நிலா! அழகு நிலா!
முளைத்ததுவிண் மேலே அது
பழமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே!

அழுதமுகம் சிரித்ததுபோல்.
அல்லி விரிந்தாற்போல் - மேல்
சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டு
தொத்திக் கிடந் தாற்போல்!

குருட்டு விழியும் திறந்ததுபோல்
இருட்டில் வான விளக்கு - நம்
பொருட்டு வந்தது பாடி ஆடிப்
பொழுது போக்கத் துவக்கு!

மரத்தின் அடியில் நிலவு வெளிச்சம்!
மயிலின் தோகை விழிகள்! - பிற
தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும்

சேர்த்து மெழுகும் வழிகள்!”

எப்படி அவரின் நிலவுக் காட்சி?
இப்படி யாநாம் எழிலைக் காண்கிறோம்?

காட்டைப் பற்றியவர் கழறுதல் கேண்மின்!
காட்டையே கண்முன் நிறுத்துதல் காண்மின்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/67&oldid=1447951" இலிருந்து மீள்விக்கப்பட்டது