உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

முறையில் அவை தைக்கப்பட்டன. மடித்துத் தொங்க விடும் தளர் ஆடையையும் அவன் வழங்கினான்.

அவன் விரும்பிய நிறம் சிவப்பு அல்லது நீலச் சிவப்பு. அவன் தலைப்பாகை அந்நிறங்களிலோ, மஞ்சளாகவோ இருந்தது. நூறு முழம் கொண்ட நேரிய துணியால், அது நெடு நீள உருவில், உச்சி தட்டையாய் இருக்கும்படி கட்டப்பட்டது. இவை தவிர, கரையில் ஒரு வெண் பட்டிழைக் கச்சையையும், மஞ்சள் கால் புதையாபரணமும் அவன் அணிந்து வந்தான். அரசிருக்கையில் அமரும் சமயம், மணிக்கை வைர வளையங்களும், விரல்களில் இரண்டு மூன்று, வைரக் கணையாழிகளும் இருப்பதுண்டு. அவன் அருகே, வைரமிழைத்த பிடியுடைய ஒரு வாள் தொங்கிற்று.

பூம்பாயல், மெத்தை படுக்கைகள் ஹைதருக்கு வழக்கமில்லை. பாசறைகளிலும் சரி, அரண்மனையிலும் சரி, பட்டுக் கம்பளம் ஒன்றும், இரண்டு மூன்று தலையணைகளும அவனுக்குப் போதியவையாயிருந்தன.

படையணியுடன் இருக்கும் போது, எல்லாப் படை வீரரும், தலைவரும் அணியும் அதே வகை அங்கியை, அவன் விரும்பும் வெண்பட்டுத் துணியில், விரும்பும் பூம்புள்ளிகளுடன் தைத்து அவன் அணிந்தான்.

உடையின் எளிமையாவது, ஹைதருக்கு ஒரு நடுத்தர உயர்குடியினன் தோற்றத்தைத் தந்தது. ஆனால், அவன் உணவுப் பழக்கம் குடிமக்களில் பலருக்குக் கூட வியப்பளிப்பதாயிருந்தது. இன்ன உணவுதான் வேண்டும் என்று அவன் எங்கும் கட்டளையிட்டதில்லை. வைத்த உணவை உண்டான். பல வகை உணவு, பல சுவை உணவு வைத்திருந்த இடங்களில், அவன் கூடிய மட்டும் எல்லாவற்றிலும் சிறிது உண்பானேயன்றி, வேண்டியது உண்டு, வேண்டாதது விலக்கியதில்லை. ஆயினும் இயற்கை விருப்பு