உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

குறை கூறுவது கோழைத்தனம். மன்னிக்க முடியாத குற்றம். அதற்கு நீங்கள் தண்டனை பெறத் தக்கவர்கள். இனி இச்செயல் செய்யாதீர்கள். போங்கள்” என்றான்.

மற்றொரு சமயம் ஷியாக்களும், ஸுனீக்களும் கலந்து அளவளாவும் சமயம், அவர்களிடையே பூசலுண்டு பண்ணத்தக்க ஒரு கதையை ஒருவன் அளந்தான். “குதிரையேறிச் செல்லும் ஒருவன், சேற்று நிலங் கடக்க வேண்டி வந்தது. குதிரையின் கால்கள் சேற்றில் ஆழப் பதிந்து விட்டன. சமயக் குரவர் பெயர்களை ஒவ்வொன்றாகக் கூறி, ‘அவர்கள் அருள் துணையால் குதிரையின் கால்கள் மேலெழுக,’ என்று அவன் வேண்டினான். வாய்மையிற் சிறந்த அபூபக்கர், நேர்மை சான்ற ஹஜ்ரத் உமர், அறிவுத் திறம் வாய்ந்த ஹஜ்ரத் உஸ்மான் ஆகியவர்களை வேண்டியும் பயனில்லாது போயிற்று.பின், வல்லமை வாய்ந்த மூர்த்துஸா அலியை வேண்ட, குதிரை கால் தூக்கி நடந்தது. வேறு சமயக் கிளையினர் தலைவர் பெயரை மதித்த குதிரை பகைச் சமயக் குதிரையாய்த்தான் இருக்க வேண்டுமென்று கருதி, பிரயாணி குதிரையை உடை வாளால் குத்திச் சாய்த்தான்.” இக்கதையைக் கூறிய பின், கதையளந்தவன் அது பற்றிய பிறர் கருத்துரை கோரினான். கருத்துரைகளால் வரவிருக்கும் பூசலை அறிந்த ஹைதர், தன் கருத்துரையை முற்படக் கூறினான்: “அன்பரே, அந்தப் பிரயாணி முற்றிலும் அறிவில்லாதவன் என்று தெரிகிறது. வாய்மை, நேர்மை, அறிவுத் திறம் ஆகிய பண்புகளால் குதிரையின் காலைத் தூக்க முடியவில்லை. வல்லமையால் தூக்க முடிந்தது. இந்த இயல்பை அந்த மட்டில் அறியாமல் போனான்,” என்றான்.

இந்த இயல்பான விளக்கம், சமயவாதிகளின் விளக்கத்துக்கும், அதன் பயனாக எழுந்திருக்கக் கூடும் பூசலுக்கும் ஒரு தடையிட்டது.