28
கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி
வந்தான். அவன் அரசியல் கவறாட்டத்தில், எதிர் கவறாட்டமாடி, ஆர்க்காட்டைக் கைப்பற்றினான். முகமதலி மீட்டும் தவிசேறினான்.
ஹைதர் இப்போது போர் வீரனாக மட்டும் செயலாற்றவில்லை. மாநிலத்தின் சூழ்நிலையையும், மைசூரின் நிலையையும் அவன் கூர்ந்து கவனித்தான். பணமும், படை வலிமையும், படைத் துறைச் சாதனங்களும் அன்றைய நிலையில் ஓர் அரசின் உறுதிக்கு மிக மிக இன்றியமையாதவை என்பதை அவன் கண்டான். எனவே, நாஸிர் ஜங் வீழ்ச்சியடைந்ததும், நாஸிர் ஜங்கின் கருவூலமும், படைத் துறைச் சாதனங்களும், எதிர் தரப்பாரிடம் சிக்கி விடாமல், அவன் தடுத்தான். அவற்றைத் தானே கைக் கொண்டு, அவற்றுடன் மைசூருக்கே மீண்டான். சிறிய படை வீரர்களிடையி லிருந்தும், பொது மக்களிடையிலிருந்தும் ஆள் திரட்டி, அவன் தன் படையணிகளைப் பெருக்கிக் கொண்டான். சிறப்பாக மலை நாட்டு மக்களாகிய வேடர்கள், அவன் படையின் ஒரு தலைக் கூறாய் அமைந்தனர்.
நாஸிர் ஜங் வீழ்ச்சியுடன், மகமதலியின் கை வலுத்திருந்தது. கிளைவின் உதவியால், அவன் அரசிருக்கை பெற்றாலும், அதை வைத்துக் காக்கும் வகையில், அவன் கையாலாகாதவனாகவே இருந்தான். இந்நிலையில் ஹைதரும், மைசூர் அமைச்சரும் கட்சிச் சார்பில்லாமல், தம் தனி நலம் பேணுவதிலேயே ஈடுபடலாயினர். இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, மைசூர் வரும் வழியிலேயே, ஹைதர் புதுச்சேரியைச் சென்று பார்வையிட்டான். பிரஞ்சுக்காரருடனும், பிரஞ்சுத் தலைவருடனும் நட்பு முறையில் அளவளாவி, அவர்கள் போர் முறைகள், கட்டுப்பாடு, அமைப்பாண்மைத் திறம், வீர உணர்ச்சி ஆகியவைகளை அவன் கூர்ந்து கவனித்தான்.
இந்நிகழ்ச்சி ஹைதர் அரசியல் வாழ்வில் ஒரு நல்லொளி விளக்கைப் போல் அமைந்தது. புதுப்படைகளைத் திறம்படப்