34
கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி
நஞ்சி ராஜனை மைசூருக்கு வர விடாமல் தடுத்தவர்கள், ஊதியம் வேண்டி அமளி செய்த அவன் படைவீரர்களே. ஹரிசிங் என்பவன் தலைமையில், ஹைதர் இல்லாத சமயத்தில், அவர்கள் நஞ்சி ராஜனைச் சிறையிலிட்டு, உணவும், நீரும் அளிக்காமல் வதைத்தனர். இந்நிலையில் நஞ்சி ராஜன் தன் வெள்ளிப் பொற்கலங்களை விற்று, அவர்களுக்குப் பணம் தர வேண்டியதாயிற்று. இப்பணத்துடன், அவர்கள் பங்களூர் அருகில் சென்று, குடித்துக் கூத்தாடி மகிழ்ந்திருந்தனர்.
ஹைதர் திரும்பி வந்து, செய்தி அறிந்தபோது, முதலில் நஞ்சி ராஜனிடமே அவன் சீற்றம் கொண்டான். “அண்ணலே! உங்களை அவர்கள் பட்டினியிட்டு வதைத்தது அடாத செயல்தான். ஆனால், அவ்வழியில் நீங்கள் இறந்திருந்தால், உங்களுக்காக அவர்கள் மீது, நான் கட்டாயம் பழி வாங்கியிருப்பேன். அத்துடன், உங்களை வீரராகப் பூசித்திருப்பேன். ஆனால் நீங்கள் மானத்தை விட, உயிர் பெரிதென்று கருதி விட்டீர்கள். அதற்காக வருந்துகிறேன். ஏனென்றால், நீங்கள் என் வீரத் தலைவர் என்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள்” என்று கனல் பறக்கப் பேசினான்.
நஞ்சி ராஜனின் நொந்த நிலை, விரைவில் ஹைதர் உள்ளத்தை உருக்கிற்று. அவன் சீற்றம், ஹரிசிங் குழுவினர் மீது திரும்பிற்று. 500 துப்பாக்கி வீரர்களை மட்டும் உடன் கொண்டு, அவன் இரவோடிரவாகக் குதிரையேறிப் புயல் வேகத்தில் சென்றான். தலைவனுக்கெதிராகக் கை ஓங்கிய அத்தறுதலைகள் மீது மூர்க்கமாகத் தாக்கி, அவர்களைக் கொன்றோ, சிதறடித்தோ ஒழித்தான். அவர்களிடமிருந்த பணம், துணிமணி, தளவாடங்களுடன் அவன் நஞ்சி ராஜனிடம் வந்து, அப்பொருள்களை அவன் காலடியில் வைத்தான்.